Published : 13 Dec 2016 08:19 AM
Last Updated : 13 Dec 2016 08:19 AM

புயலால் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்: மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

‘வார்தா’ புயல் காரணமாக 3 ஆயிரம் மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

வார்தா புயல் நேற்று மாலை சென்னை அருகில் கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. சேதத்தை தவிர்க்க, மின் வாரியம் மின் விநியோகத்தை நிறுத்தி வைத்தது.

இதனால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்ட போதிலும், பலத்த காற்றின் காரணமாக மின் கம்பங்கள் தூக்கி வீசப்பட்டன. இவற்றை சீரமைக்கும் பணியில் தற்போது மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வார்தா புயலின் தாக்கத்தால் பல இடங்களில் மின் பாதை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை, மணலி, தரமணி உள்ளிட்ட 4 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இவை தவிர, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 30 மின் மாற்றிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. போதுமான மின் மாற்றிகள் உள்ளிட்டவை சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இவற்றைக் கொண்டு சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

மின் விநியோக தொடர் பணியில் 2 ஆயிரம் பேர் தற்போது ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக ஆயிரத்து 500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு, சென்னை பெருநகர பகுதியில் இரவுக்குள் மின் இணைப்பு கொடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பகுதிகளில் நிலைமை சீரானதும் தொடர்ந்து இணைப்பு கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x