Last Updated : 26 Dec, 2022 05:22 PM

 

Published : 26 Dec 2022 05:22 PM
Last Updated : 26 Dec 2022 05:22 PM

ஜிப்மர் சேவை குறைபாடு: மத்திய அமைச்சரிடம் பாஜக அடுக்கிய புகார் - உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு

ஜிப்மர் குறைபாடுகள் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் மனு தந்த பாஜக

புதுச்சேரி: ஜிப்மர் சேவை குறைபாடு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சரிடம் பாஜக அடுக்கடுக்காக சுட்டிக்காட்டி புகார் மனுவைத் தந்தது. இதையடுத்து புகார்களை சரிசெய்து நடவடிக்கை எடுக்க ஜிப்மர் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது. தமிழ் தெரிந்த டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க முன்னுரிமை தர புதுச்சேரி அமைச்சர் வலியுறுத்தியதை கவனம் செலுத்த மத்திய அமைச்சர் உத்தரவிட்டார்.

புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவர், ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் உள்ளிட்ட உயர் மருத்துவர்கள் உடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தின்போது பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், ஜிப்மர் சேவை குறைபாடு தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார். அதுதொடர்பாக புகார் மனுவையும் எழுத்துபூர்வமாக அளித்தார். அதில், "ஜிப்மருக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் அறிய நடவடிக்கை எடுத்து சிகிச்சை பெற உதவ வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்யும் நேரத்தினை அதிகப்படுத்த வேண்டும் மேலும் பரிசோதனை பற்றிய முடிவை உடனே தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வருகை தரும் புற்றுநோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு காலதாமதப்படுத்தாமல் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுக்கு இரவு நேரங்களில் வருகை தரும் நோயாளிகளுக்கு எந்த விதமான தடையும் இல்லாமல் உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தினால் சேவை வழங்க முடியவில்லை என்றாலும் புதுச்சேரியில் உள்ள மற்ற அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் சிகிச்சை வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆலோசனைக் கூட்டத்தின்போது மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து நோயாளிகளுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

தமிழ் தெரியாத டாக்டர்கள், செவிலியர்கள்: அதேபோல் அதிகாரிகளுடன் கூட்டத்தின்போது, புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், மத்திய அமைச்சரிடம், "ஜிப்மரில் தமிழ் தெரியாத டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து ஜிப்மர் இயக்குநரிடம் மத்திய அமைச்சர் விளக்கம் கேட்டார். அதற்கு, "மருத்துவர்கள், செவிலியர்களை மத்திய நிர்வாக சீர்த்திருத்தத் துறை நியமன விதிப்படி நாடு முழுவதுமிருந்து விண்ணப்பம் செய்து பெருகிறோம். அதில் விதிமுறை மாற்றுவது அவசியம்" என்றனர்.

அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், "பணிக்கான விண்ணப்பம் பெறும்போது டாக்டர்கள், செவிலியர்களில் தமிழ் தெரிந்தோருக்கு முன்னுரிமை என்று குறிப்பிட்டாலே போதுமானது" என்றார். அதையடுத்து மத்திய அமைச்சர், "மத்திய நிர்வாக சீர்த்திருத்தத் துறை கவனத்துக்கு கொண்டுசெல்கிறேன். ஜிப்மர் இயக்குநரும் இவ்விஷயத்தை தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x