Published : 25 Dec 2022 07:48 PM
Last Updated : 25 Dec 2022 07:48 PM

திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிதி முறைகேடு விவகாரம் - தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

போராட்டத்தில் கலந்து கொண்ட கே. பாலகிருஷ்ணன்

தஞ்சாவூர்: நிதி முறைகேட்டில் ஈடுபட்ட திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பாக கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”விவசாயிகள் வாங்காத கடனை செலுத்தச் சொல்வது நியாயமில்லை. அவர்களைக் கைது செய்யவேண்டிய நிலை ஏற்பட இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேளாண்மைத்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக நேற்று முன் தினம் பேசினேன். அப்போது அவர், 'போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பிரச்சினை நியாயமானதுதான். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வதற்கு முயற்சி செய்கிறேன்' என கூறியுள்ளார். வங்கி அதிகாரிகளும், ஆலை நிர்வாகமும் இணைந்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டி வரும். இது தொடர்பாகத் தமிழக முதல்வரை சந்தித்துப் பேசுவதற்கு முயற்சி செய்வோம்.” எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் 26-வது நாளாகப் போராட்டம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பாக கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x