Published : 24 Dec 2022 04:39 AM
Last Updated : 24 Dec 2022 04:39 AM

வெண்மணி நினைவு நாளை அரசு நிகழ்ச்சியாக அங்கீகரிக்க வேண்டும்

‘வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களே’ என்றார் மார்க்ஸ். ஆம்... அன்றைய கீழத்தஞ்சை மாவட்டத்தில் நாகை தாலுகாவில் அதாவது இன்றைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 25.12.1968 அன்று ஆண், பெண் குழந்தைகள் என 44 தலித்கள், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், ராமையா என்பவரின் குடிசையில் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த கொடும் சம்பவ நினைவு தினமானடிசம்பர் 25 அன்று தஞ்சை மாவட்ட இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதேநேரம், அஞ்சலி செலுத்துவதில் அரசியல் இயக்கங்களும், தமிழ்த்தேசிய அமைப்புகளும் தலித் அமைப்புகளும், இதர அமைப்புகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்தியல் வேறுபாடுகள் கொண்டுள்ளன.

பிற அமைப்புகள் அஞ்சலி செலுத்தமார்க்சிஸ்ட் கட்சியின் வரன்முறைப்படுத்தப்பட்ட அனுமதி மற்றும் அனுமதி மறுப்பு இவற்றால் அபிப்ராய பேதம் கொண்டு பொது வெளியிலும் சமூக தளத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

அந்த விமர்சனத்தில் ஒன்றாக தியாகம் என்பது பொது சமூகத்துக்கானது. அந்த வகையில், வெண்மணி தியாகமும் களப்பணியாளர்களின் உயிர் ஈகையும் சமூகத்துக்கானது. அது மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

பொதுவுடைமைக்கு ஏற்புடையதா?: பொதுவுடைமை கருத்தியலில் பயணிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, வெண்மணி சம்பவம், அதன்பால் எழுந்த தியாகம்,அங்கு அமைக்கப்பட்ட நினைவிடம் ஆகியவற்றை தனக்கான தனியுடைமையாக கருதுவது பொதுவுடைமையில் பயணிக்கும் கட்சிக்கு அழகுதானா? என்ற விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.

வெண்மணி சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு உரிமை கொள்வது ஏற்புடையதுதான். ஏனெனில் அந்த சம்பவத்தில் தொடர்புடைய உழைக்கும் ஆண்கள், பெண்கள் பெரும்பாலானோர் மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பான அகில இந்திய விவசாய சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்து சங்கக் கொடியான செங்கொடியை ஏற்றுவதில் பிரச்சினை முற்றி, அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட கொடிய சம்பவம் நிகழ்ந்தது என்பது மறுக்க முடியாதது.

ஆனால், இந்த தியாக வரலாறு, இன்றைய தலைமுறைக்கும், பொது சமூகத்துக்கும் விரிவாகாமல் இருப்பது ஏன்? என்பதைக் கேட்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

தியாக வரலாறு, வெற்றி வரலாறு சம்பவங்களின் நினைவிடங்களாக உள்ள மகாராஷ்டிரா மாநில மகர் வீரர்களின் வெற்றியைக் காட்டும் கேரோகான் வெற்றி விழா நிகழ்வு, அம்பேத்கர் புத்தம் தழுவிய நாக்பூர் தீட்சா பூமி ஆகியவை இந்திய அளவில் பொது சமூகத்தால் ஈர்க்கப்பட்டு இன்றைய இளைய தலைமுறையும், அந்த தலங்களுக்கு கருத்தியல் யாத்திரைசெய்து, பெருமளவில் பொது சமூகத்தில் கொண்டு சேர்த்துவிட்டனர்.

அதேபோல்தான் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முதல் துன்பியல் சம்பவமாக பதிவு செய்யப்பட்ட வெண்மணி சம்பவமும். கொலைக்களத்தில் தலித்கள் இருந்ததை மட்டுமே குறியீடாகக் கொண்டு மேற்கண்ட சம்பவம் என்பது ஒரு வர்க்கப் போரின் வரலாற்று சாட்சியம் என ஒரு தத்துவத்தின் வழியே எளிதாக கடந்துவிடக் கூடாது.

இந்த சம்பவம் சமூக நீதி இன்றி, சமூகஅநீதியால் நிகழ்ந்தது என எக்காலமும் பொது சமூகமும் குற்றமுறு நெஞ்சோடுஅதை நோக்க வேண்டும். அதற்கு வெண்மணி நினைவு தினம் பொதுவுடைமை தாண்டி பொதுவுரிமை ஆக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்போராட்ட வரலாற்றை, முதல் பாடமாக பல தலைமுறைகளாக வரலாறு கற்பித்துக் கொண்டே இருக்கும்.

ரஷ்யாவின் லெனின் கிராடு, சீன செஞ்சதுக்கம், வியட்நாம் ஹோஸ்மின் நினைவிடம் ஆகியவை கட்சிக்கும் ஆட்சிக்கும் பொதுமக்களுக்கும் பொதுவுடைமையோடு பொதுவுரிமையானது. அதேபோல், வெண்மணி நினைவிடத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்து அதற்கான செயல்திட்டத்தை நோக்கி மார்க்சிஸ்ட் கட்சி பயணிப்பதே, வெண்மணி தியாகம் அனைத்து தளங்களிலும் செல்ல ஏதுவாகும்.

முதல்வரால் முடியும்: அண்ணா தனது ஆட்சியில் ஏற்பட்ட கரும்புள்ளியாக வெண்மணி சம்பவத்தை கருதி வெளிப்படையாகவே கண்ணீர் சிந்தினார். கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்கு மிக அருகில் அமைந்துள்ளது வெண்மணி கிராமம். இந்த கொடிய சம்பவத்தின் கரும்புள்ளி திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்டதாக இருந்து வருகிறது. அதை அழிக்கும் ஆற்றல் இன்றைய முதல்வருக்கு உண்டு.

எவ்வாறெனில் வெண்மணி சம்பவம்சமூகநீதி மறுக்கப்பட்ட சமூக அநீதியின்வெளிப்பாடு. எனவே, வெண்மணி நினைவுதினத்தை அரசு நிகழ்ச்சியாக அங்கீகரித்து வெந்து மடிந்த தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் முதல்வர், அமைச்சர்கள், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி செலுத்தவும் பொது விடுமுறையாக அறிவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் வெண்மணி தியாகமும் பொதுவுடைமையோடு பொதுமக்களின் பொதுவுரிமை ஆகிவிடும்.

- கதாக. அரசு தாயுமானவன்,

வழக்கறிஞர்

திருத்துறைப்பூண்டி.

டிச.25 - வெண்மணி நினைவு தினம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x