Published : 05 Jul 2014 07:23 PM
Last Updated : 05 Jul 2014 07:23 PM

பின்னி எடுத்தார் ஃபின்ச்: சச்சின் தலைமையிலான எம்.சி.சி. அணி அபார வெற்றி

ஆரோன் ஃபின்ச் அபார விளாசலின் துணையுடன், ரெஸ்ட் ஆஃப் த வேர்ல்ட் அணியை அபாரமாக வீழ்த்தியது, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான எம்.சி.சி. அணி.

யுவராஜ் சிங் சதம்

லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணியின் கேப்டன் ஷேன் வார்ன் தயங்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

அதிரடி துவக்க விரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், விரேந்திர சேவாக் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 41 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து கொடுத்த அதிரடித் துவக்கம் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு சோர்வடைந்தது. சயீத் அஜ்மல் அதன் பிறகு ஆடம் கில்கிறிஸ்ட், தமீம் இக்பால், பீட்டர்சன், அஃப்ரீடி ஆகியோரை மடமடவென வீழ்த்த இந்த அணி 12வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது.

சேவாக் 22 ரன்களில் 5 பவுண்டரிகளை விளாசினார். சில சுலபமான பவுண்டரிகள் அதில் இருந்தாலும் பிரெட் லீ பந்தை நேராக பவுண்டரி அடித்த ஷாட் அவரது பழைய ஃபார்மை நினைவூட்டியது. அவர் பிரெட் லீ வீசிய ஆஃப் கட்டரை பின்னங்காலில் சென்று ஆடுவதற்குப் பதிலாக தனது வழக்கமான பாணியில் கால்களை நகர்த்தாமல் அடிக்க முயன்றார். பந்து அவரை ஏமாற்றி பவுல்டு ஆனது.

ஷான் டெய்ட் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து அசத்திய கில்கிறிஸ்ட் 29 ரன்களில் அஜ்மல் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். தன்னை ஒதுக்கிய இங்கிலாந்துக்கு நிரூபிக்க நினைத்து ஆட வந்த பீட்டர்சனுக்கு சச்சின் அவரது பலவீனமான இடது கை சுழற்பந்து வீச்சைக் கொண்டு வந்தார். அதாவது டேனியல் வெட்டோரியைக் கொண்டு வந்தார். மறு முனையில் சயீத் அஜ்மல் வீசிக்கொண்டிருந்தார். பீட்டர்சனும் 10 ரன்களில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். அதே ஓவரில் அடுத்த பந்தை தடுத்தாடிய அஃப்ரீடிக்கு அதற்கு அடுத்த அஜ்மல் பந்து என்ன ஆனது என்றே தெரியவில்லை பவுல்டு ஆனார். ரன் இல்லை.

அப்போது யுவராஜ் சிங், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் இணைந்தனர். யுவராஜ் உண்மையில் அபாரமான திட்டமிடுதலுடன் இன்னிங்ஸை ஆடினார். சாவதானமாக ஆடினார். காலிங்வுட்டும் அவரும் 25 ஓவர்களில் 6வது விக்கெட்டுக்காக 131 ரன்களைச் சேர்த்தனர்.

யுவ்ராஜ் சிங், ஏரோன் ஃபின்ச் வீசிய நட்பு ரீதியான ஸ்பின் பந்தை முதலில் டீப் மிட்விக்கெட்டில் சிக்சருக்குத் தூக்கினார். பிறகு டேனியல் வெட்டோரி பந்தில் மீண்டும் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சக்தி வாய்ந்த சிக்சரை அடித்தார். 53 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அவர் அரைசதம் கடந்தார். காலிங்வுட் 64 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து பிரெட் லீ வீசிய பந்தை ஸ்லிப்பில் திராவிடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிரிக்கெட்டை விட்டு விலகியிருந்தாலும் திராவிடிடம் இன்னும் அதே ரிஃப்ளெக்ஸ் இருந்ததற்கு இந்த கேட்ச் சாட்சியாகும்.

காலிங்வுட் ஆட்டமிழந்தவுடன் அஜ்மல் உலக அணியை முடித்து விடுவார் என்றே தோன்றியது, ஆனால் பீட்டர் சிடில் களமிறங்கி நன்றாகவே ஆடினார். யுவராஜ் ஆட்டம் சூடு பிடிக்க இருவரும் இணைந்து 11 ஓவர்களில் 84 ரன்களை 7வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

யுவ்ராஜ் சிங் மேலும் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 115 பந்துகளில் சதம் கண்டார். சதமடித்தப் பிறகு யுவ்ராஜ் மேலும் 3 சிக்சர்களை விளாசினார். இதில் அஜ்மல் பந்தை மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ் அவருக்காக நிறைய பேசும்.

சச்சின் டெண்டுல்கர் பந்து வீச வந்தவுடன் மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்தாலும், பரிசு விக்கெட்டான யுவராஜ் சிங்கை வீழ்த்தினார் சச்சின்.

134 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் யுவராஜ் சிங். அற்புதமான இன்னிங்ஸ். அவர் இவ்வளவு அனாயசமாக, தடுமாற்றமில்லாமல் ஆடியதைப் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது.

கடைசியில் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது.

பீட்டர் சிடில் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஷேன் வார்ன் 3 நாட் அவுட். அஜ்மல் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லீ 10 ஓவர்களில் 55 ரன்களுக்கு 2 விக்கெட். உமர் குல்லுக்கு 2 ஓவர்களே கொடுக்கப்பட்டது.

ஃபின்ச் அபாரம்

இதைத் தொடர்ந்து, 294 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சச்சின் தலைமையிலான எம்.சி.சி. அணி, 45.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 296 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்ச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 145 பந்துகளில் 181 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தார்.

துவக்க ஆட்டக்கார்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் 45 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். லாரா 38 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.

ராகுல் திராவிட் ரன் ஏதும் எடுக்காமல் காலிங்வுட் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ஃபின்ச்சுக்கு கடைசி வரை ஆட்டமிழக்காமல் உறுதுணையாக மறுமுனையில் விளையாடி வந்த சந்திரபால் 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் தரப்பில் காலிங்வுட் 2 விக்கெட்டுகளையும், முரளிதரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x