Published : 22 Dec 2022 04:10 AM
Last Updated : 22 Dec 2022 04:10 AM

நிலுவைத் தொகையை செலுத்தாததால் திண்டுக்கல்லில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.9 லட்சம் நிலுவைத் தொகையை செலுத்தாததால் காவிரி குடிநீர் திட்ட விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள ஆத்தூர் நீர்த்தேக்கம் மூலம் 30 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 18 வார்டுகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருவதால், அதிலிருந்து பெறப்படும் தண்ணீருக் கேற்ப மாநகராட்சி நிர்வாகம் பணம் செலுத்த வேண்டும்.

தினமும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து 9 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.) பெறப்பட்டு வந்தது. கடந்த மாதம் வரை முறையாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக குடிநீர் விநியோக அளவை 9 எம்.எல்.டி.யில் இருந்து 5 எம்.எல்.டி.யாக குடிநீர் வடிகால் வாரியம் குறைத்துவிட்டது. இதனால் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த 18 வார்டுகளில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.9 லட்சம் நிலுவைத் தொகையை செலுத்தாமல் தாமதப்படுத்திவருவது தான் இதற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் குடிநீருக்கு செலுத்த வேண்டிய தொகையை முறையாக செலுத்தாமல், அந்த பணத்தை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு போதுமான மழை பெய்தும், நீர்நிலைகள் மற்றும் காவிரி ஆற்றில் போதுமான தண்ணீர் இருந்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் தவறான செயல்பாடுகளால் செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பணத்தை முழுமையாக செலுத்தி 9 எம்.எல்.டி தண்ணீர் பெற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x