Last Updated : 21 Dec, 2022 06:44 PM

1  

Published : 21 Dec 2022 06:44 PM
Last Updated : 21 Dec 2022 06:44 PM

விலங்குகள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கோழிப்பண்ணைகளை சேர்க்காதீர்: மாநிலங்களவையில் ராஜேஸ்குமார் எம்.பி வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று கால்நடை பாராமரிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில், விலங்குகள் வதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கோழிப்பண்ணைகளை சேர்க்கும் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி.யான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வலியுறுத்தினார்.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஸ்குமார் பேசியது: “கால்நடை பராமரிப்பு அமைச்சக இணையதளம் மூலம், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வரைவு (திருத்தம்) மசோதா 2022 தொடர்பாக பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை கேட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

வரைவு பிசிஏ திருத்த மசோதாவின் கீழ் கோழிகளை சேர்க்கக்கூடாது என கோழிப் பண்ணையாளர்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன். 20 பில்லியன் டாலர் தொழில்துறை மதிப்புடன் இந்தியா இப்போது உலகின் 3-வது பெரிய முட்டை உற்பத்தியாளராக உள்ளது. நாட்டில் உள்ள 1.2 பில்லியன் டன் கோழிகளில் ஆண்டுதோறும் 4.8 மில்லியன் டன் கோழிகள் இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மொத்த கோழிகளில் 36% ஆகும்.

ஓமன், மாலத்தீவு, இந்தோனேசியா, வியட்நாம், பூட்டான், ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு நாடு மூன்று லட்சத்து இருபதாயிரம் மெட்ரிக் டன் முட்டை மற்றும் இறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைக்கு பெயர் பெற்றது. மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் முட்டைப் பங்களிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழிலில் தோராயமாக 20 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளன.

வரைவு பிசிஏ (திருத்தம்) மசோதா, கோழிப்பண்ணையாளர்களின் கவலைகளைத் தீர்க்கத் தவறிவிட்டது. வளர்ப்புப் பறவைகளை விலங்குகளாகக் கருத முடியாது. ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இந்த மசோதாவில் உள்ள பிரிவு 11 ல் 1,000 முதல் &. 2500 வரையிலான அபராத விதிகள் பற்றியது. ஒரு கோழியின் விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். மேலும் 3 A, 10(2), 11(i), 11C, 34, போன்ற பல பிரிவுகளும் கோழி பண்ணையாளர்களுக்கு எதிராகவே உள்ளன.

ஏற்கெனவே, அந்தந்த மாநில அரசுகளின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநில சட்டத்தின் கீழ் கோழிகளை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, இந்த மசோதாவில் முக்கிய பங்குதாரர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளை பெற்று இந்த வரைவுத் திட்டத்தில் மாறுதல்கள் செய்ய மத்திய அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

திமுக எம்.பி. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்

கோழி வளர்ப்பு ஒரு கிராமத் தொழில் ஆகும். இது, சிறப்புத் தன்மை மற்றும் பொருளாதார நிலைத்தன்மை கொண்டது, எனவே, மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், நாட்டின் அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும்.

மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, பால் உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு ஏற்ப கோழிகளை உற்பத்திப் பறவைகளாகக் கருதி முறைப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். முழு வரைவு பிசிஏ திருத்த மசோதாவில், கோழிக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x