Published : 21 Dec 2022 04:27 AM
Last Updated : 21 Dec 2022 04:27 AM

திருச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

திருச்சி வேங்கூரில் நேற்று நடைபெற்ற முகாமில் கன்றுகுட்டிக்கு தடுப்பூசி செலுத்தும் கால்நடை பராமரிப்புத் துறையினர்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் பணியில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு முன்னர் தோல் கழலை நோய் (லம்பி ஸ்கின் வைரஸ்) பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் பாதிப்புக் குள்ளாயின.

இந்த நோய் தமிழகத்துக்குள் வருவதற்கு முன்பே தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் இந்த நோய் தாக்கம் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கிய கால்நடைகளின் தோலில் கட்டிகள் நிறைந்து காணப்படும். பால் உற்பத்தி குறையும், சினை பிடிக்காது, தரமான கன்றுகள் ஈனாது என்பதால், கால்நடை வளர்ப்போர் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து திருச்சி மண்டல கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: இந்நோய் வராமல் தடுக்கும் வகையில் ஏற்கெனவே 30 ஆயிரம் டோஸ்கள் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு, சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒருசில இடங்களில் சில கால்நடைகள் இந்த நோய் பாதிப்புக் குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 58 கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 7,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் மேலும் 2 லட்சம் டோஸ்கள் தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே, கால்நடைகளுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.

கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதிக்கு அருகில் முகாம் நடைபெறும்போது, தங்களது கால்நடைகளை கொண்டு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 3 மாத கன்று முதல் பெரிய மாடுகள் வரை இந்த தடுப்பூசியை செலுத்தலாம்.

இந்த நோய் பூச்சிக்கடி மூலம் பரவுகிறது. இதனால் தோலில் அம்மை போன்று சிறுசிறு கட்டிகள் ஏற்படும். கடுமையான காய்ச்சல் இருக்கும். கட்டிகள் உடைந்து அதன் மத்தியிலிருந்து சீழ் வெளியேறும். மாடுகள் சோர்வாக இருக்கும். பெரும்பாலும் ஈ, கொசு, உண்ணிக் கடி ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட மாடு மூலம் இது பரவுவதால் மாடுகளை கட்டியுள்ள இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

இந்த நோய் பாதிப்பு தென்பட்டவுடனேயே அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம். இது தொடர்பாக கிராமங்களில் துண்டுப் பிரசுரம் மூலம் கால்நடை வளர்ப்போரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எனவே, அனைத்து கால்நடைகளுக்கும் இந்த தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

வாழவந்தான்கோட்டையில் இன்று...: திருச்சி மாவட்டம், துவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டை கால்நடை மருத்தகத்தில் இன்று (டிச.21) தோல் கழலை நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இந்த முகாமை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x