Last Updated : 18 Dec, 2016 11:06 AM

 

Published : 18 Dec 2016 11:06 AM
Last Updated : 18 Dec 2016 11:06 AM

வார்தா’ புயல் தாக்கப்போவதை உணர்ந்து பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இருந்து பாதுகாப்பாக தப்பிய வெளிநாட்டு பறவைகள்: மீண்டும் எப்போது வரும் என்று காத்திருக்கும் ஆர்வலர்கள்

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவைகள், வார்தா புயல் தாக்குவதற்கு 2 நாட்கள் முன்பு அந்த இடத்தை காலி செய்துகொண்டு பாதுகாப்பாக தப்பிச் சென்றுவிட்டன. அவை மீண்டும் எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.

தலைநகர் சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது பள்ளிக்கரணை சதுப்புநிலம். நன்னீரும், கடல்நீரும் சங்கமிக்கும் இப்பகுதி பறவைகளின் இயற்கை வாழிடமாக உள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு வலசைப் பறவைகள் தங்கி இளைப்பாறும் இப்பகுதியைப் பார்வையிட, வனத்துறையின் அனுமதியுடன் பறவை ஆர்வலர்கள் கடந்த 6-ம் தேதி சென்றனர். அப்போது, கூழைக்கடா, கறுப்பு வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வலசைப் பறவைகள் கூடு கட்டிக்கொண்டிருந்தன. அவர்கள், மீண்டும் 10-ம் தேதி சென்றபோது ஒரு பறவைகூட அங்கு இல்லை. சதுப்பு நிலத்தையே வாழிடமாகக் கொண்ட சில சிறிய பறவையினங்கள் மட்டுமே அங்கு இருந்தன.

அடுத்த 2 நாட்களில்தான், சென்னையை வார்தா புயல் தாக்கி பல்லாயிரக்கணக்கான மரங்களை பெயர்த்துப்போட்டது. இயற்கை சீற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கை உணர்வு, இயற்கையாகவே பறவை, விலங்கினங்களுக்கு உண்டு. புயல் வரப்போவதை உணர்ந்துதான், அப்பறவைகள் அங்கிருந்து சென்றிருக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இதுதொடர்பாக பறவைகள் ஆர்வலரான ‘நேச்சர் டிரஸ்ட்’ கேவிஆர்கே திருநாரணன் மேலும் கூறியதாவது:

வேடந்தாங்கல் பறவைகள், உள்நாட்டு, அயல்நாட்டு வலசைப் பறவைகளின் தங்குமிடமாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் உள்ளது. வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டபோது இந்த நிலம் 317 ஹெக்டேர் மட்டுமே இருந்தது. தற்போது 690 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. சதுப்புநிலத்தில் பொதுவாக மரம் வளராது. அதன் இறுதிப் பகுதிகளில் வளரும் மரங்களை பறவைகள் கூடுகட்டப் பயன்படுத்தும். கடல்நீரும், நன்னீரும் சங்கமிக்கும் பகுதியான இப்பகுதியில் உணவு அதிகம் கிடைக்கும் என்பதால், அதிக அளவில் பறவைகள் தங்கிச் செல்கின்றன.

ஆண்டு முழுவதும் இங்கு 60 வகையான பறவைகளைக் காண முடியும். இவற்றில் கூழைக்கடா, கறுப்பு வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள்தான் புயலுக்கு முன்பு கூடு கட்டிக்கொண்டிருந்தன. புயல் வரப்போவதை அவை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதனால்தான், 10-ம் தேதி காலையே அந்த இடத்தை காலிசெய்துவிட்டு பாதுகாப்பாக பறந்துசென்றுவிட்டன.

பழவேற்காடு சதுப்புநிலப் பகுதியில் இந்த புயலின்போதும் பிளமிங்கோ பறவைகள் வந்துசென்றுள்ளன. வழக்கமாக வடகிழக்கு பருவகால இறுதியில் வலசைப் பறவைகளை பள்ளிக்கரணையில் பார்க்க முடியும். இப்போது பறந்து சென்றுவிட்ட இவற்றை இனி எப்போது பார்க்க முடியும் என்பது தெரியவில்லை. அதே நேரம், வேறு சில பறவைகள் தற்போது மீண்டும் சதுப்புநிலத்தை நோக்கி வருகின்றன. புயலுக்கு முன்பு சதுப்புநிலத்தில் நீர்வளம் குறைவாக இருந்தது. தற்போது நீர்வளம் அதிகம் உள்ளது. இது ஒருசில பறவையினங்களுக்குப் பிடிக்கும் என்பதால் அவற்றின் வரவுக்காக காத்திருக்கிறோம். வனத்துறை உதவியுடன் மீண்டும் பறவைகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x