Published : 13 Dec 2016 10:10 AM
Last Updated : 13 Dec 2016 10:10 AM

மீண்டும் இயங்கத் தொடங்கியது சென்னை விமான நிலையம்

வார்தா புயலால் மூடப்பட்ட சென்னை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணி முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

வார்தா புயலால் நேற்று (திங்கள்கிழமை) காலை முதல் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

சென்னை விமான நிலையத்தின் ஓடு பாதைகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. மோசமான வானிலையும் நிலவியது. இதனால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஓடுபாதைகளில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்தது. இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் 44 பன்னாட்டு மற்றும் 123 உள்நாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடும் புயல்காற்றால் விமான நிலையத்தில் 7 இடங்களில் கண்ணாடிகளும், 3 இடங்களும் மேற்கூரையும் உடைந்து விழுந்தன.

விமானச் சேவை நிறுத்தப்பட்டிருப்பது தெரியாமல், விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. காலை 5.45 மணி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x