Published : 25 Jul 2014 09:08 AM
Last Updated : 25 Jul 2014 09:08 AM

பொதுப்பணித்துறையில் ரூ.149 கோடியில் புதிய திட்டங்கள்: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.149 கோடியில் ஆறு, ஏரிகளை புனரமைப் பது, தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும் என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் காளிங்க ராயன் அணையை புனரமைக்கும் பணி ரூ.7 கோடியிலும் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சரபங்கா நதியின் குறுக்கே உள்ள 13 அணைகளை புனரமைக்கும் பணி ரூ.5 கோடியிலும் செயல்படுத் தப்படும்.

பாபநாசம் வட்டம் வெண்ணாற் றின் கரைகளை பலப்படுத்துவது, தேனி மாவட்டம் தந்தை பெரியார் வாய்க்காலில் 12 ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு புனரமைப்பது, நத்தம் வட்டம் ராஜநேரி வழங்கு கால்வாயை நவீனப்படுத்துவது, ஊட்டி ஏரியின் தெற்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் மண் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டுவது, நெல்லை மாவட்டம் பள்ளிக்கோட்டை வழங்கு வாய்க்கால் மற்றும் பள்ளமடை ஏரி ஆகியவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட 12 பணிகளை ரூ.37 கோடி செலவில் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், பெரம்பலூர், விருதுநகர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் குறுக்கே புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகள் ரூ.22.50 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.19 கோடியில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் குறுக்கே புதிய தளமட்டச் சுவர், படுகை அணை அமைக்கப்படும்.

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், சிவகங்கை, வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நீரை சேமித்து, செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்ட ரூ.17.5 கோடியில் தடுப்பணைகள் கட்டவும் முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்தில் வராக நதி குறுக்கே புதிய பாலம் ரூ.3 கோடியில் கட்டப்படும். பரமக்குடியில் வைகை ஆற்றின் இடது கரையில் புதிய சர்வீஸ் சாலை ரூ.6 கோடியில் அமைக்கப்படும்.

நாகர்கோவில் மற்றும் மதுரையில் பிரிவு அலுவலகங்க ளுடன் கூடிய 2 உபகோட்ட அலுவலக கட்டிடங்கள் ரூ.54 லட்சத் தில் கட்டப்படும். வில்லிபுத் தூரில் ரூ.50 லட்சத்தில் ஆய்வு மாளிகை கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் ரூ.149 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x