Published : 19 Dec 2022 06:10 AM
Last Updated : 19 Dec 2022 06:10 AM

விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு முன்னேறி செல்ல வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

இந்திய குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி ராஜ் பவனில் நேற்று கலந்துரையாடினார். இதில், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சென்னை: இந்திய குடிமைப் பணி தேர்வில் பங்கேற்கும் பட்டதாரிகள், தங்கள்மீதான விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வெழுத பயிற்சி பெறும் தேர்வர்களுடன் ’எண்ணித் துணிக’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் மாணவர்கள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்து பேசியதாவது: குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு, தீவிர பயிற்சியுடன் இலக்கை நோக்கி ஒரு தவம்போல தீர்க்கமாக இருக்க வேண்டும். தற்போதைய நவீனகால தொழில்நுட்ப வளர்ச்சியில் நமதுகவனத்தை பரவலாக சிதறடிக்கக்கூடிய அம்சங்கள் அதிகம் உள்ளன. அதை தவிர்த்து உங்கள் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களை சுருக்கமாக எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமையுடன் உடல் மற்றும்மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அரசுப்பொறுப்புகளில் உயர் பதவிகளைஎட்ட இளமைப் பருவத்திலேயே பணியில் சேர முயற்சிக்க வேண்டும்.

குடிமைப் பணியில் முக்கியமுடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் அது தவறாகவும் வாய்ப்புள்ளது. அதற்காக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கக் கூடாது. இல்லையெனில் நீங்கள் தகுதியற்றவராகிவிடுவீர்கள்.

தேர்வில் பங்கேற்கும் பட்டதாரிகள் தங்களைச் சுற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு, தொடர்ந்து வெற்றியைநோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். உங்கள் கவனத்தை திசை திருப்பும் பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்.

தினமும் நாளிதழ் வாசிப்பது அவசியம். நீங்கள் பெறும் வெற்றியானது, உங்கள் சமுதாயத்தை மாற்றுவதுடன், எதிர்கால சந்ததியின் நலனுக்கானதாகவும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் வழிசெய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x