Published : 20 Dec 2016 12:27 PM
Last Updated : 20 Dec 2016 12:27 PM

திண்டுக்கல் அருகே நூதனம்: அரசியல் தலைவர்களுக்கு நினைவுச்சின்னம் கட்டும் கிராமத்தினர் - இந்திரா காந்தி, ராஜீவ், எம்.ஜி.ஆர். வரிசையில் ஜெயலலிதா

திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம் பட்டியில் இறந்த அரசியல் தலைவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் அமைத்து அவர்களின் நினைவை போற்றி வருகின்றனர். முன்னாள் பிரதம ர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நினைவுச் சின்னம் அமைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ளது என்.பஞ்சம்பட்டி. இங்கு அனைத்து கட்சிகளுக்கும் கிளை அமைப்பு உள்ளது. இப்பகுதி மக்கள் அவரவர்களுக்கு பிடித்த தலைவர்கள் மீதான அளவில்லா பாசம் இன்று மட்டுமல்ல முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இருந்துள்ளது. இந்திரா காந்தி 1984 அக். 31-ல் இறந்தபோது அவருக்கு பஞ்சம்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் சேர்ந்து நினைவுச்சின்னம் அமைத்துள்ளனர். ‘ஒருமை ப்பாட்டுக்கும் சமாதானத்துக்கும் உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவி பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவுச் சின்னம்’ என அவருக்கு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு 1991-ல் இந்திரா காந்தியின் நினைவுச்சின்னத்தை ஒட்டியே நினைவுச்சின்னம் அமைத்துள்ளனர். இதை பின்பற்றி அதிமுகவினர் முன் னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இறந்தபோது 1987 டிசம்பரில் தனியாக ஒரு நினைவுச்சின்னம் அமைத்துள்ளனர். இதிலும் அதிமுகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆரின் நினைவுச்சின்னம் அருகிலேயே நினைவுச்சின்னம் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். பணிகள் முடிந்த நிலையில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற உவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம்.

இதுகுறித்து பஞ்சம்பட்டி கிளை கழக ஜெ. பேரவை செயலாளர் அருள்சாமி கூறியதாவது:

அரசியல் தலைவர்களுக்கு நினைவுச்சின்னம் கட்டுவது என்பது இந்திரா காந்தி காலம் முதல் தொடர்கிறது. தற் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என எங்களு க்குள்ளேயே பணம் வசூலித்து இதை கட்டியுள்ளோம். ரூ.50 ஆயிரம் வரை செலவு வரும். டைல்ஸ் ஒட்டும் பணி விரைவில் முடிந்துவிடும். இதன்பின் கல்வெட்டு வைக்கப்படும். இறந்த தலைவர்களை நாங்கள் அரசியல் தலைவராக மட்டும் பார்க்காமல் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதால்தான் இந்த நினைவு சின்னத்தை கல்லறையாக நினைக்கிறோம். இன்றும் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று இங்கு வந்து வழிபடுகிறோம். அன்று ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் போன்ற உதவிகளை செய்கிறோம்.

இதேபோல் ஜெயலலிதா நினைவு நாளிலும் ஏழைகளுக்கு எங்களால் ஆன உதவிகளை செய்வோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x