Last Updated : 17 Dec, 2022 06:06 AM

 

Published : 17 Dec 2022 06:06 AM
Last Updated : 17 Dec 2022 06:06 AM

விருத்தாசலம் | என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு ஒரு ஏக்கர் நிலம், வீடு வழங்குவோருக்கு ரூ.75.50 லட்சம் இழப்பீடு தர முடிவு

விருத்தாசலம்: என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்குவோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.75.50 லட்சம்வழங்க என்எல்சி நிர்வாகம் முன்வந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் நில உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர்.

என்எல்சி நிர்வாகம் தனது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக ஆண்டுக்கு 250 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதில் நில உரிமையாளர்களுக்கும் என்எல்சி நிறுவனத்திற்கும் இடையே தொடர்பிரச்சினை நிலவுவதால் கடந்த4 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணி தடைபட்டுள்ளது.

இதனால் சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பழுப்பு நிலக்கரி வெட்டியெ டுக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கம்மாபுரம் ஒன்றியத்துக் குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, மேல்பாதி, கீழ் பாதி, சுப்பையா நகர் உள்ளிட்ட கிராமங்களில் 81.32 ஹெக்டேர் (200 ஏக்கர்) உடனடியாக கையகப் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏற்கெனவே அளவீடு செய்யப்பட்டுள்ள நிலங்களை கையகப்படுத்த என்எல்சி அதி காரிகள் கரிவெட்டி, கத்தாழை பகுதிகளுக்குச் சென்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து மாநில அரசின் ஆலோசனைப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏ-க்கள்சபா.ராஜந்திரன், எம்ஆர்ஆர். ராதாகிருஷ்ணன், அருண்மொழித் தேவன், வேல்முருகன், நில எடுப்பு தனி துணை ஆட்சியர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நிலம் வழங்கக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த நில உரிமையாளர் களிடம் 3 முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிரந்தர வேலைவாய்ப்பையே பிரதான கோரிக்கை யாக நில உரிமையாளர்கள் முன் வைத்தனர். ஆனால் நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்குவதாகவும், ஏக்கருக்கு ரூ.23 லட்சம் வழங்குவதாகவும் கூறியது. விவசாயிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கும் உரிமையாளர்களின் கோரிக்கையை முன்வைத்து புவனகிரி தொகுதிஅதிமுக எம்எல்ஏ அருண்மொழித் தேவன் தலைமையில் நெய்வேலி 2-ம் சுரங்கம் முன்பு இன்று ஆர்ப் பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சி.வி.சண்முகம் எம்பி பங்கேற்று கண்டன உரையாற்றவுள்ளார்.

வேலை வாய்ப்பே முக்கியம்: இதற்கிடையில், நில உரிமை யாளருக்கு ஒரு ஏக்கருடன் வீடும் வழங்குவோருக்கு மொத்த இழப்பீட்டுத் தொகையாக ரூ.75.50 லட்சம் வழங்க முன்வந்திருப்பதாக மாவட்ட நில எடுப்புப் பிரிவு வாயிலாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணனிடம் கேட்டபோது, “அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.25 லட்சம், கான்கிரீட் வீடிருந்தால் அதற்கு மாற்றாக ரூ.23,60,000 மதிப்பில் 1000 சதுரடியில் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.

மேலும், மாற்றுமனைக்காக ரூ.5,12,150, பிழைப்பூதியம் ரூ.36,000, இடமாற்றத்துக்கான வாகனப்படி ரூ.75,000, மாட்டுக் கொட்டைக்காக ரூ.25,000, சிறுவணிகத்திற்கு ரூ.25,000, மறுவாழ்வுப்படி ரூ.50,000, பத்திரப்பதிவு செலவுக்கு ரூ.2,62,600, வேலை வேண்டாம் என்பவருக்கு ஒருமுறை ரொக்கமாக ரூ.17,00,000 என மொத்தம் ரூ.75,45,750 வழங்க என்எல்சி முன்வந்துள்ளது.

இதுதவிர ஏற்கெனவே குடியி ருந்து வரும் பழைய வீட்டின் இன்றைய மதிப்பு கணக்கீடு பொதுப்பணித்துறை பொறியாளர் அளிக்கும் அறிக்கையின் பேரில்அதற்குரிய தொகையும் வழங்கப் படும்” என்றார்.

இதுதொடர்பாக கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜி.கிரகோரியிடம் கேட்டபோது, “என்எல்சி நிறுவனம் இதுவரை கையகப்படுத்திய நில உரிமை யாளர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி எதையும் செய்ய வில்லை. எனவே என்எல்சி நிர்வாகம்கூறுவதை ஏற்க இயலாது. நிலத்துக்கான இழப்பீடு என்பது 2-ம் பட்சம் தான். ஆனால் நிரந்தர வேலை என்பதில் நில உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். வேலை வாய்ப்பை உறுதி செய்த பின்னர் தான் இழப்பீடு குறித்து முடிவெடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x