Published : 16 Dec 2022 09:23 PM
Last Updated : 16 Dec 2022 09:23 PM

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.74 கோடி உண்டியல் காணிக்கை: கடந்த ஆண்டை விட ரூ.1.52 கோடி அதிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.74 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலையில் 17 நாட்கள் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில், துர்க்கை அம்மன் கோயிலில் நிரந்தரம் மற்றும் தற்காலிகம் என 86 உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்பட்டன.

இதையடுத்து, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்களுக்கு எண்ணப்பட்டன. திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 450 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா மற்றும் வீடியோ கேமரா மூலமாக காணிக்கை எண்ணும் பணி பதிவு செய்யப்பட்டன.

இதில் ரூ.2 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 492 ரொக்கம், 278 கிராம் தங்கம், 2,261 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.1.52 கோடி கூடுதலாகும். இதேபோல் கூடுதலாக 35 கிராம் தங்கம், 1,282 கிராம் வெள்ளி இருந்தது. கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு பிறகு, கடந்தாண்டு நவம்பர் மாதம் இறுதியில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 133, 243 கிராம் தங்கம் மற்றும் 979 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x