Published : 16 Dec 2022 05:04 AM
Last Updated : 16 Dec 2022 05:04 AM

''நானும் இசை ரசிகன்'' - மியூசிக் அகாடமியின் 96-வது இசை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மியூசிக் அகாடமியின் 96-வது இசை விழாவைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு ‘இந்து’ குழுமம் வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அறக்கொடை விருதை வழங்கி கவுரவித்தார். (வலமிருந்து) லால்குடி விஜயலட்சுமி, லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன், திருவாரூர் பக்தவத்சலம், நெய்வேலி சந்தானகோபாலன், அமைச்சர் தங்கம் தென்னரசு, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, சங்கீத கலாநிதி டி.வி.கோபாலகிருஷ்ணன், சங்கீத கலாநிதி எஸ்.சவுமியா. படம்: ம.பிரபு

சென்னை: மியூசிக் அகாடமியின் 96-வது இசை விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

மியூசிக் அகாடமியின் 96-வது மாநாடு மற்றும் இசை விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வான நெய்வேலி ஆர்.சந்தானகோபாலன் (2020), திருவாரூர் பக்தவத்சலம் (2021), லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி (2022) ஆகியோருக்கு ‘இந்து’ குழுமம் வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை (பரிசுத் தொகை ரூ.1 லட்சம், பொன்னாடை, நினைவுப் பரிசு உள்ளடக்கியது) வழங்கினார்.

இதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் பேசியதாவது: மியூசிக் அகாடமியின் 96-வதுஇசை விழாவைத் தொடங்கிவைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 1927-ம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வளர்ப்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 96 ஆண்டுகள் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்தி வருபவர்களுக்கு பாராட்டுகள். இன்னும் 4 ஆண்டுகளில் மியூசிக் அகாடமியின் இசை விழா நூற்றாண்டு நடைபெறப்போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் இருக்கக்கூடிய இசைக் கலை மன்றங்களில் மிக முக்கியமானதாக இருக்கக் கூடியது இந்த மியூசிக் அகாடமி. இசைக்கு மாபெரும் வரலாறு உண்டு. அதில் மியூசிக் அகாடமிக்கு தனிப்பெரும் இடம் உண்டு.

நானும் இசை ரசிகன்: முதலமைச்சர் என்பதால் மட்டும் நான் பங்கெடுக்கிறேன் என்பதல்ல, நான் இசை ஆர்வலன், இசை ரசிகன் என்ற அடிப்படையில்தான் நானும் பங்கெடுத்திருக்கிறேன். அதற்காக நான் இசைக் கலைஞனோ இசை அறிஞனோ அல்ல. என்னுடைய தாத்தா முத்துவேலர் இசைவாணராகத் திகழ்ந்திருக்கிறார். இசை ஞானம் மிக்கவராக என்னுடைய தந்தை கலைஞர் இருந்தார்.

என்.முரளிக்கு ‘இந்து’ நாளிதழின் இயக்குநர் என்பது ஓர் அடையாளம் என்றால், மியூசிக் அகாடமி இன்னொரு அடையாளம். அந்த அளவுக்கு இந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர்.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து இசைப் பறவைகளை சென்னையை நோக்கி வரவேற்கும் ஒரு வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி திகழ்கிறது. இசையை வளர்த்தல் என்பது கலையை வளர்த்தல். கலையை வளர்த்தல் என்பது நமது பண்பாட்டை வளர்த்தல். பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரிகத்தை வளர்த்தல். அந்தவகையில் மக்களின் மனத்தையும் இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை மியூசிக் அகாடமி போன்ற இசைக் கலை மன்றங்கள் செய்துவருவது மிகப் பெரிய தொண்டு.

இந்த மாபெரும் விழாவில் சங்கீத கலாநிதி விருதை பெறவிருக்கும் நெய்வேலி சந்தானகோபாலன், மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், வயலின் கலைஞர்கள் லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி, சங்கீத கலா ஆச்சார்யா விருதைப் பெறவிருக்கும் நாதஸ்வர வித்வான் கீழ்வேளூர் என்.ஜி. கணேசன், இசை அறிஞர் ரீத்தா ராஜன், இசை அறிஞர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமி, டி.டி.கே. விருது பெற்ற கலைஞர்கள், நிருத்திய கலாநிதி விருது பெறவிருக்கும் மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இசை உலகின் மிகப் பெரிய விருது மியூசிக் அகாடமி விருது. இந்த உயரிய விருதைப் பெறவிருக்கும் நீங்கள் அனைவரும் தொடர்ந்து இந்தத் துறையில் தொண்டாற்றி உங்களைப் போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இசைக்கலைஞர்களுக்கு கோரிக்கை: எங்களின் விழாக்கள் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை தங்களின் கொள்கையாக மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நாட்டுக்கும் தனிநபருக்கும் இத்தகைய கொள்கைதான் தேவை. பொதுவாக முதல்வரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் நான், மியூசிக் அகாடமி போன்ற அமைப்புகளில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கவேண்டும் என்பதை இசைக் கலைஞர்களிடம் என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி தன்னுடைய வரவேற்புரையில், மேயராக இருந்தபோது, அரசியலிலும் பொதுவாழ்விலும் சமூக ரீதியாகவும் முதல்வர் ஸ்டாலின் எத்தகைய சீர்திருத்தங்களைச் செய்தார் என்பதை நினைவுகூர்ந்தார். விருது பெற்ற கலைஞர்களை வரவேற்றுப் பேசினார்.

இவ்விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்கீத கலாநிதி டி.வி.கோபாலகிருஷ்ணன், சங்கீத கலாநிதி எஸ்.சவுமியா ஆகியோர் கலந்துகொண்டனர். மீனாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்தார். ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார்.

‘நான் தினந்தோறும் இந்து நாளிதழை நினைத்துக் கொண்டேயிருப்பேன்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘நான் தினந்தோறும் இந்து நாளிதழை நினைத்துக் கொண்டே இருப்பேன். எனக்கு பெரும்பாலும் அன்பளிப்பாக பலரும் அளிக்கும் புத்தகமாக இருப்பவை ‘இந்து’ குழுமம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பேரறிஞர் அண்ணா பற்றிய `மாபெரும் தமிழ்க்கனவு' என்னும் புத்தகமும், தலைவர் கலைஞர் பற்றிய `தெற்கிலிருந்து ஒரு சூரியன்' புத்தகங்களும்தான். அதனால்தான் இந்த நிறுவனத்தை தினமும் நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் மேடையாகவும் இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x