Published : 07 Dec 2016 08:19 AM
Last Updated : 07 Dec 2016 08:19 AM

ஜெயலலிதா மறைவு: தமிழக தலைவர்கள் இரங்கல்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு தமிழக ஆளுநர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்

தமிழக மக்களின் மனம் கவர்ந்த, மக்களின் முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் சுறுசுறுப்பு மற்றும் துணிச்சலின் அடையாளமாகத் திகழ்ந் தார். மதிநுட்பமும், அறிவாற்றலும் கொண்டவர். அனைவராலும் பாசத்தோடு ‘அம்மா’ என்று அழைக்கப்படும் அவர், பெண்களுக்கு அதிகாரமளித்தலின் உருவமாக திகழ்ந்தவர். சளைக்காமல் பணியாற்றக்கூடிய உணர்வு மிக்கவர். ஏழை மக்களுக்காகவும், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காகவும் தனது வாழ்க் கையையே அர்ப்பணித்தவர்.

தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்க சென்னை வந்தபோது விமான நிலையத்தில் அவர் என்னை வரவேற்ற அந்த நாளை ஆசையோடு நினைத்துப் பார்க் கிறேன். அப்போது புன்முறுவலுடன் அவர் காட்டிய பாசம், அவர் பேசிய இனிமையான வார்த்தைகள் என் மனதில் இன்னும் பசுமையாக நிற் கின்றன. அவரது மறைவு இந்திய நாட்டுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். துயரமான இந்த நேரத்தில் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

கருணாநிதி (திமுக தலைவர்)

திரைப்பட உலகில் கதாநாயகியாக 120-க்கும் அதிகமான தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் எய்தியவர் ஜெயலலிதா. அதன் பின்னர் எனது அருமை நண்பர் புரட்சி நடிகர் எம்ஜிஆரால் அரசிய லுக்கு அழைத்து வரப்பட்டார்.

1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டார்.எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்த வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். எனினும் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்)

முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வரின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பாகும். திமுக சார்பிலும், கருணாநிதி சார்பிலும் ஜெயலலிதாவுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கத்தில் சத்துணவு உயர்மட்டக் குழு உறுப்பினராக, ராஜ்யசபா உறுப் பினராக, அதிமுகவின் பொதுச் செயலாளராக, தமிழக முதல்வராக என பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றியபோது தன்னுடைய ஒவ்வொரு பொறுப்பிலும் தனி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா என்பது பாராட்டுக்குரியது மட்டுமின்றி சிறப்புக்குரியதாகவும் அமைந்திருக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நான் துணை முதல்வராக இருந்து பணியாற்றி இருக்கிறேன்.

அண்மையில் அவர் மீண்டும் முதல்வராக தேர்வு பெற்று, தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து, நிறைவேற்றுவதில் தன் உணர்வை எந்த அளவுக்கு தொடர்ந்து அழுத்தமாக வெளியிட்டிருக்கிறார் என்பதை எண்ணி நாம் உள்ளபடியே அவருக்கு பாராட்டு தெரிவித்தாக வேண்டும்.

அவரை இழந்து இன்றைக்கு தமிழக மக்களும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களுக் கும் எந்த அளவுக்கு வேதனையில் இருப்பார்கள் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வேதனையில், துயரத்தில் திமுகவினரும் குறிப்பாக கருணாநிதியும் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்)

முதல்வர் ஜெயலலிதா இயற்கை எய்திய செய்தி அறிந்து துயரமும், வேதனையும் அடைந்தேன். எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டு திரையுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் பிரிந்த கட்சியை இணைத்து ‘இரட்டை இலை’ சின்னத்தை திரும்பப் பெற்று தலைவர் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடினார். கோடான கோடி மக்களின் அன்புக்குரியவராய் தாய்மார்களின் பேரன்புக்கு பாத்திரமானவராய் சாதி, மத, எல்லைகளைத் தாண்டி அனைவராலும் மதிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

தமிழகத்தின் முதல்வராக 4 முறையும், எதிர்க்கட்சித் தலைவராக 2 முறையும் பதவி வகித்த ஜெயலலிதா, அவரது பதவிக்காலத்தில் பலமுறை முத்திரைகளை பதித்திருக்கிறார். பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகம் செய்தது, ஏழைக் குடும்பங்களை சீரழித்த பரிசுச் சீட்டுக்களை ஒழித்தது, புதிய வீராணம் திட்டம் ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட சில குறிப்பிடத்தக்க திட்டங்கள் ஆகும். ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)

127 திரைப்படங்களில் தாரகையாக மின்னிய ஜெயலலிதா, ஓய்வு அறியாத படிப்பாளியாக திகழ்ந்தவர். 6 முறை முதல்வராக பொறுப்பு ஏற்றார்.சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். முல்லைப்பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, தமிழக உரிமையைப் பாதுகாத்துத் தந்தார். காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக் கொண்ட இடைவிடாத முயற்சிகளால் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசு இதழில் இடம் பெற்றது. அவரை உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)

துணிச்சல் மிக்க, மனிதாபிமானமிக்க தலைவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. அம்மா என்றழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மரணத்தால் வெறுமை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அவரின் இழப்பை தனிப்பட்ட இழப்பாகவே நான் கருதுகிறேன். ஒரு பெண் அரசியல்வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல.

உடல் நிலை தேற வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தோம், இன்று இழப்பை தாங்கும் உறுதியை இறைவன் தர வேண்டும் என பிரார்த்திப் போம். அதிமுக தொண்டர்கள் தங்கள் தாயை இழந்து தவிக்கிறார்கள், அவர்களுடனும் தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்)

தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர். தமிழகத் தினுடைய மாநில உரிமைகளை பெறுவதில் போராடி வெற்றி கண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை பிரிந்து வாடக்கூடிய அதிமுக தொண்டர்களுக்கு என ஆழ்ந்த அனுதாபத்தை உரித்தாக்குகிறேன்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்)

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் இரு அணிகளாக பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக நிலைநாட்டி இழந்த இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்று சாதனை படைத்தார். 1991-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் தொடர்ந்து 2001, 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார். தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டுவதில் நெஞ்சுறுதியுடன் போராடினார். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதல்வர் இயற்கை எய்தினார் என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கின்றது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)

முதல்வரின் இழப்பு அவர் சார்ந்த இயக்கத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் ஏன் இந்தியாவுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே பணியாற்றியவர். குறிப்பாக தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றுக்கு நீதிமன்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.

இயக்கத்துக்காகவும், பொதுமக்களுக்காகவும் வாழ்ந்த தமிழக முதல்வர் மறைந்தாலும் அவர் செய்த பணிகள், ஆற்றிய தொண்டுகள் என்றும் நிலைத்து நிற்கும். அவரது ஆன்மா சாந்தியடைய இறை அருளை வேண்டுகிறேன்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்)

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பகைவென்று சாதனைகளைப் படைத்த ஒரு மகத்தான தலைவராக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெருமைக்குரியவர் ஜெயலலிதா. சாதி, மதம், மொழி, இனம் போன்ற வளையங்களை மீறி அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கிற பேராற்றலைக் கொண்டவராக விளங்கியவர். கட்சியையும், கட்சித் தொண்டர்களையும், தமிழக மக்களையுமே தனது குடும்பமாகக் கருதி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருடைய இழப்பு எவ்வகையிலும் எவராலும் ஈடுசெய்ய இயலாததாகும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ( தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்)

முதல்வர் ஜெயலலிதாவை பள்ளிப் பருவத்திலிருந்தே நன்கறிவேன். அப்போதே தனித்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். பிறகு பல்வேறு அரசியல் சூழல்களால் நான் அவரை விமர்சித்து இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீது மிகவும் அன்போடு இருப்பார். மிகுந்த துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட அவர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதைத் திறம்பட எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர். அவரை தமிழகத்தின் இந்திராகாந்தி என்றால் அது மிகையாகாது. அவரை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்களின் துயரத்தில் பங்கேற்பதோடு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டினை இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்புடன் (76வது சட்டத்திருத்தம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சரித்திர சாதனையை நிகழ்த்தியதற்காக செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு சமூகநீதிகாத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து திராவிடர் கழகம் மகிழ்ந்தது. ஜெயலலிதா அவர்கள் பெற்றுத் தந்த ஆட்சியினை, அவர் வகுத்த பாதையில் அதிமுகவினர் மிகுந்த ஒற்றுமையுடன் நடத்தி செல்வார்கள் என்று நம்புகிறோம். இவ்வாட்சி திராவிடர் ஆட்சியாகவே தொடரவேண்டியது மிகவும் அவசியமானது. அவரதுஉடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞரணித் தலைவர்)

இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை இந்திராகாந்திக்கு அடுத்து நிருபித்த தலைவர் ஜெயலலிதா ஆவார். தனிப்பட்ட முறையில் என் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா. 1991-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதா கலந்துகொண்ட முதல் சமூக நிகழ்ச்சி எனது திருமணம்தான். ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

தன்னிகரல்லா தலைமை பண்பு, படித்தவர் முதல் பாமரன் வரை அனைவரையும் தன்வசம் கவர்ந்த வசீகர தன்மை, வியக்க வைக்கும் அறிவாற்றல், அளவிட முடியா மனஉறுதி, கடினமான பணிகளையும் வெற்றிகரமாக முடிக்கும் சாதுர்யம், மக்களை அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் உயர்ந்த சிந்தனைகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர் ஜெயலலிதா. இலங்கை தமிழர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு போன்ற பல நீண்டகால பாதிப்புகளுக்கு இரும்பு போன்ற உறுதியுடன் தார்மீக அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் அவர் எடுத்த முயற்சிகளும், செயல்பாடுகளும் உலகம் இருக்கும் வரை தமிழினத்தால், தமிழகத்தால் மறக்க முடியாது.

கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர்)

அதிமுக எனும் அரசியல் கட்சியை ஓர் ராணுவம் போல் உருவாக்கி மிகுந்த கட்டுப்பாடு உள்ள மாபெரும் அரசியல் இயக்கமாக்கிய பெருமை அவருக்கு உண்டு. ஜெயலலிதாவின் கொள்கைகளில் வேறுபாடு காண்போர் உண்டு. ஆனால், அவர் எதையும் ஆழமாக அறிந்து, துல்லியமாக பேசி, வன்மையோடு சாதிக்கும் திறன் பெற்றவர். துணிச்சலுக்கு உதாரணமானவர். நிலையில்லா இந்த உலக வாழ்க்கையில் தன் புகழை நிலையாக நிற்கும் அளவுக்கு சாதனை புரிந்து மறைந்தவர் வரிசையில் ஜெயலலிதா வின் பேரும் இடம் பெற்றுள்ளது. இன்று முதல் அவர் ஒரு சரித்திரமாகவே ஆகிவிட்டார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்)

முதல்வர் ஜெயலலிதா அறிவாற்றலும் மதிநுட்பமும் நிறைந்த அரசியல் தலைவராக விளங்கினார். கட்டுக்கோப்புடன் ஒரு அரசியல் கட்சியை நடத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் தலைமை தாங்கிய அதிமுக விளங்கியது.வடநாட்டில் இருப்பது போல் முஸ்லிம்களை அழைத்து தனது செலவில் ரமலான் நோன்பு திறப்பு விழாக்களை நடத்தி தமிழகத்தில் ஒரு புதிய வழிமுறையை அவர் ஏற்படுத்தினார். கோடிக்கணக்கான தமிழக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்ற அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி தலைவர்)

அறிவியல் வளர்ச்சியும், மருத்துவத் துறையின் பல்வேறு சாதனைகளும் நிகழ்ந்து வரும் இக்காலத்தில் 68 வயதில் மரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் சமரசம் செய்து கொள்ளாத போர்க் குரலாக விளங்கிய ஜெயலலிதாவின் சாதனைகளும், மக்கள் நலத்திட்டங்களும் அவரின் புகழை என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலங்களில் தமிழ்நாட்டின் வாழ்வரிமை பிரச்சினைகளிலும் தமிழினத்தின் உரிமை பிரச்சினையிலும் அயராது குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஈழத்தமிழர் பிரச்சினையில் தனித் தமிழீழமே தீர்வு என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர். ராஜீவ்காந்தி வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான சட்டப் போராட்டங்களை தீரமுடன் நடத்திய நம் காலத்தே வாழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாராக திகழ்ந்தவர். உலகத் தமிழினத்தின் பெருநம்பிக்கை ஆலமரமாக திகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழினத்துக்கு பேரிழப்பாகும்.

நவாப் முகமது அப்துல் அலி (ஆற்காடு இளவரசர்)

முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி, துணிச்சலான தலைவர். தனது தோற்றப்பொலிவால் மக்களின் மனம்கவர்ந்த தலைவர். மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை பெற்றிருந்தார். அவர் செய்த பணிகளால் தமிழக மக்கள் அவரை என்றும் நினைவுகூர்வர். மறைந்த ஜெயலலிதா வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆற்காடு இல்லம் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார். பாரம்பரியமிக்க அமீர் மகாலுக்கு அவர் வருகை தந்தது எங்கள் குடும்பத்தால் என்றும் நினைவுகூரப்படும். அவர் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

பெ.மணியரசன் (தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர்)

தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார் ஜெயலலிதா. ஆணாதிக்க அரசியல் நிலவுகின்ற சூழலில் ஒரு பெண் இவ்வளவு உயரத்துக்கு வளர்ந்ததும் மக்களின் பேராதரவுடன் நிலைத்ததும் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.

ஏ.எம்.விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர்)

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற ஆபத்து வந்தபோது சி்ல்லறை வணிகர்களின் வாழ்க்கையை காப்பற்ற வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்டு சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்திய மாநிலங்களில் முதல் மாநிலமாக தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்தவர் ஜெயலலிதா. சென்னை வானகரத்தில் வால்மார்ட் நிறுவனம் மொத்த வணிகம் என்ற பெயரில் கால் பதிக்க முயன்ற போது அதனை தடுத்து நிறுத்திய பெருமை மிக்கவர்.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர்)

உறுதியுடன் செயல்படும் குணம் கொண்ட ஜெயலலிதா சமூகநீதி , இடஒதுக் கீடு, சிறுபான்மையினர் உரிமை, மாநில உரிமை ஆகியவற்றில் தெளிவான கொள்கை கொண்டவராய் செயல்பட்டார். இந்திய அரசின் மக்கள் விரோத கல்விக்கொள்கைக்கு எதிராகவும், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிராகவும் உறுதியுடன் இருந்தார். அதிமுக தலைமை அவர் வழியில் இவற்றை எதிர்ப்பதும் மாநில மக்களின் நலன் கருதி கல்வி, மொழி ஆகியவற்றியில் மாநிலத்துக்குரிய கொள்கையை உருவாக்கி செயல்படுவதே அக்கட்சி அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன், தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ், ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் டாக்டர் எம்.எல்.ராஜா, எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் ஏ.சயீத், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராசிரியர் ராமசாமி, ஈழக்கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து

ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர், வென்று காட்டியவர், தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்ட முடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர் தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.

கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம், இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x