Published : 14 Dec 2022 06:08 AM
Last Updated : 14 Dec 2022 06:08 AM

விபத்தில் சிக்கி மயங்கி கிடந்தவரின் ரூ.1.50 கோடி நகைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த காவல் ஆய்வாளர்: ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

பாடி மேம்பாலம் அருகே விபத்தில் சிக்கி மயங்கி கிடந்தவரின் பையில் இருந்த ரூ.1.50 கோடி நகைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த காவல் ஆய்வாளர் சிவானந்த், முதல்நிலைக் காவலர் தீபன் சக்கரவர்த்தி ஆகியோரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சென்னை: மதுரவாயல் காவல் ஆய்வாளர் சிவானந்த். இவர் நேற்று முன்தினம் மாலை பாடி மேம்பாலம் வழியாக ரோந்து வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கு ஒருவர் விபத்தில் சிக்கி சாலை ஓரம் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடப்பதைப் பார்த்தார்.

உடனே தனது வாகனத்தை நிறுத்திய சிவானந்த், அவரை ரோந்து வாகன ஓட்டுநர் முதல்நிலைக் காவலர் தீபன் சக்கரவர்த்தி உதவியுடன் மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இதையடுத்து மயங்கி கிடந்த நபரின் பையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்கநகைகள் இருப்பதை பார்த்த சிவானந்த் உடனே அந்த நகைகளை அண்ணா நகர் காவல் சரக உதவி ஆணையர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் விபத்தில் காயமடைந்தவர் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (54) என்பதும்,அவர் தி.நகரில் ஒரு பிரபலமான நகைக் கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இச் சம்பவத்தில் உடனடியாக செயல்பட்டு நகைக் கடை ஊழியர் ஹரிஹரன் உயிரை காப்பாற்றி, நகைகளும் திருடுபோகாமல் பார்த்துக்கொண்ட காவல் ஆய்வாளர் சிவானந்த், முதல்நிலை காவலர் தீபர் சக்கரவர்த்தி இருவரையும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x