Last Updated : 13 Dec, 2022 03:50 PM

1  

Published : 13 Dec 2022 03:50 PM
Last Updated : 13 Dec 2022 03:50 PM

அனைத்துக்கும் மத்திய அரசு அனுமதி பெற காலதாமதம்: மத்திய அமைச்சர், ஆளுநர் முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் புகார்

புதுச்சேரி: “அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசு அனுமதியைப் பெற வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை” என்று மத்திய அமைச்சர், துணைநிலை ஆளுநர் முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புகார் கூறியுள்ளார்.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேசி தர்ஷன் நிதிக் கொடை திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்க விழா இன்று புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி, துணைநிலை ஆளுநர் தமிழிசை முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பேசியது: "புதுச்சேரிக்கு வணிகத் துறை, கலால் துறை, பத்திரப் பதிவு துறைகள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இது தவிர சுற்றுலா வளர்ச்சியின் மூலம் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு நிதியை முறையாக செலவிட்டு, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.

நிர்வாகத்தில் சில நடைமுறை சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது. அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. சிலவற்றை தளர்த்தி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. எதை விரைவாக செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும்.

நிலத்தை தனியாருக்கு வழங்க வேண்டும் என்றால், எத்தனை ஆண்டு வழங்க வேண்டும் என்பதில் பல கேள்விகள் எழுகிறது. இதை நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளோம். தனியார் பங்கீடு சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தேவையான லாபம் ஈட்டுவது அவசியம். முதலீடு செய்பவர்கள் லாபம் ஈட்ட நினைக்கின்றனர். சில விதிகளை தளர்த்தினால் அவர்கள் முதலீடு செய்ய புதுச்சேரிக்கு வருவார்கள் என்பது உண்மை.

வேகமான முன்னேற்றம் இல்லாத நிலைக்கு காலதாமதம் ஒரு காரணம். நிர்வாகத்தில் சிறு, சிறு தடங்கல், காலதாமதம் ஏற்படுகிறது. புதுச்சேரியில் முதலீடு செய்தால் உடனுக்குடன் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலை இருந்தால்தான் முதலீடு செய்ய வருவார்கள். பலர் முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர். இந்த நிலை மாறினால் புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.சுட்டிக்காட்டுவதை தவறாக நினைக்கக் கூடாது. விரைவான வளர்ச்சி வரவேண்டும் என்பதே எண்ணம். நடைமுறைகளை தளர்ச்சி சிறப்பாக செயல்படுத்தினால் நல்லது" என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர், ஆளுநர் முன்னிலையில் கூட்டணியில் உள்ள முதல்வர், மத்திய அரசை குற்றம்சாட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x