Published : 13 Dec 2022 01:35 PM
Last Updated : 13 Dec 2022 01:35 PM

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: சமக தலைவர் சரத்குமார்

பேட்டி அளித்த சரத்குமார்

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடங்கி வைத்த பிறகு சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "மதுவிலக்கை கொண்டுவருவதால் மதுவின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பது பாதிக்கும். இதன் காரணமாக வருமானத்தை ஈடு செய்வதில் சிரமம் ஏற்படும். இதற்கு மாற்று யோசனையை முன்வைக்க உள்ளோம். காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டை மீறி போதைப் பொருள்கள் தமிழகத்திற்குள் கடத்தப்படுகின்றன. பள்ளிச் சிறுவர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்துகின்றனர். பூரண மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான். அதை மாற்ற தொழிற்சாலைகளை உருவாக்கி, அதிக வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கலாம்.

மதராஸ் மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் மதுவிலக்கு சாத்தியமானது. ராஜாஜி காலத்தில் மதுவிலக்கு சாத்தியமானது எப்படி என்பது குறித்து ஆராய வேண்டும். மது ஆலைகளை மூட முடியாவிட்டால் அதை வேறு வெளிமாநிலத்திற்கு மாற்றலாம். மது ஆலை என்பதும் ஒரு தொழில்தான். பூரண மது விலக்கால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய ஆற்று மணல் , கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தலாம்.

பார்ட்டி என்றால் மதுபானம் பரிமாறப்படுகிறது. அனைவருடனும் சேர்ந்து மது அருந்தாவிட்டால் தங்களை ஒதுக்கி விடுவார்கள் என நினைத்து மது அருந்துகின்றனர். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. முதல்வரின் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா தொங்கிச் சென்றதில் தவறு இல்லை. உடனே செல்ல வேண்டி இருந்ததால் அந்த வாகனத்தில் ஏறி விட்டார். கனிமொழி, உதயநிதி ஆகியோருக்கும்கூட அத்தகைய சூழல் ஏற்பட்டால், தொங்கிச் சென்றுதான் ஆக வேண்டும். இதில் மேயரின் சாதியை குறிப்பிட்டு பிரச்சினையைக் கொண்டு வரக்கூடாது." என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x