Published : 13 Dec 2016 01:45 PM
Last Updated : 13 Dec 2016 01:45 PM

சென்னையில் சீரமைக்கப்பட்ட சாலைகளின் விவரம்

'வார்தா' புயலால் சென்னையில் சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், >#Roadscleared என்ற ஹேஷ்டேகின் மூலம் சென்னையில் சீரமைக்கப்பட்டுள்ள சாலைகளின் விபரத்தைப் பதிவிட்டு வருகிறது.

சீரமைக்கப்பட்ட சாலைகளின் விபரம்

மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், #Roadscleared என்ற ஹேஷ்டேகின் மூலம் சென்னையில் சீரமைக்கப்பட்டுள்ள சாலைகளின் விபரத்தைப் பதிவிட்டு வருகிறது.

இதன்படி அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, ஆர்.கே. சாலை, சர்தார் படேல் சாலை மற்றும் லால்பகதூர் சாஸ்திரி சாலை ஆகியவை சீரமைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம்: >https://twitter.com/tnsdma

வார்தாவின் கோரத் தாண்டவம்:

சென்னையை மணிக்கு 110 கிமீ வேகத்தில் தாக்கிய 'வார்தா' புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறைக் காற்றாலும், கொட்டித் தீர்த்த மழையாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந்த புயலால் சாலையோரங்களில் இருந்த 3,300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அவற்றை அகற்றி வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் களமிறங்கி மரங்களை அகற்ற, போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது.

சென்னை - கள நிலவரம்

ஓஎம்ஆர்

பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மற்றும் பெருங்குடியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரயில் சேவை தொடங்கப்படவில்லை. மந்தைவெளி முதல் மைலாப்பூர் வரையான அனைத்துப் பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கவில்லை.

திருவான்மியூர்

திருவான்மியூர் பேருந்து நிலையம் இன்னும் தன்னுடய இயல்புக்குத் திரும்பவில்லை. 49, 95 மற்றும் 23C ஆகிய மூன்று பேருந்துகள் மட்டுமே அங்கிருந்து இயங்குகின்றன.

ஆற்காடு சாலை

போக்குவரத்து இயல்பாக உள்ளது. சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

அண்ணா சாலை

முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது.

நெல்சன் மாணிக்கம் சாலை

அமைந்தகரையில் இருந்து எல்.ஐ.சி. செல்லும் சாலைகளான நெல்சன் மாணிக்கம் சாலை - ஸ்டெர்லிங் ரோடு - கல்லூரி சாலை - எத்திராஜ் சாலை - அண்ணா சாலை / சிந்தாதிரிப்பேட்டை சீர்செய்யப்பட்டுள்ளது. வீழ்ந்த மரங்களால் போக்குவரத்தில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை

பிடுங்கி எறியப்பட்ட மரங்களால், போக்குவரத்து மெதுவாக இருக்கிறது.

பாடி

பாடி பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்துகளும் செல்லவில்லை. வில்லிவாக்கத்தில் இருந்தும், புதிய ஆவடி சாலையில் இருந்தும் கீழ்ப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x