Published : 17 Dec 2016 08:43 AM
Last Updated : 17 Dec 2016 08:43 AM

இந்தியாவில் முதல் முறையாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையை தொடங்கியவர் டாக்டர் ரங்கபாஷ்யம்: அப்போலோ குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி புகழாரம்

இந்தியாவில் முதல்முறையாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையைத் தொடங்கியவர் டாக்டர் ரங்கபாஷ்யம் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியுள்ளார்.

சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய ‘டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்’, வி.ஆர்.தேவிகா எழுதிய ‘வார்டு 10 - ரிமெம்பரிங் ரங்கபாஷ்யம்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அப்போலா மருத்துவமனைகள் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேசியதாவது:

டாக்டர் ரங்கபாஷ்யம் மிகச்சிறந்த அறுவைசிகிச்சை நிபுணராக விளங்கினார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1974-ம் ஆண்டு இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர், இந்தியாவிலேயே முதல்முறையாக இரைப்பை குடல் சார்ந்த அறுவை சிகிச்சை துறையை தொடங்கினார். அதேபோல, இந்த துறை யில் பட்ட மேற்படிப்பை நாட்டிலேயே முதல்முறையாக ஏற்படுத்திய பெருமைக் குரியவர் டாக்டர் என்.ரங்கபாஷ்யம்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்து’ என்.ராம் பேசும்போது, “மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் கையாண்டவர் டாக்டர் ரங்கபாஷ்யம். உலகத்தர மருத்துவரான அவர், வெளிநாட்டுக்கு சென்று மருத்துவராக பணிபுரியாமல், இங்கேயே மருத்துவ சேவை ஆற்றினார். அவரைப் பற்றிய புத்தகத்தின் மூலம் நாம் அறியவருவது கடினஉழைப்பு, தொடர்பயிற்சி மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதாகும்” என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஆப்ரஹாம் வர்கீஸ் பேசும்போது, “மருத்துவர்களுக்கு முன்னுதாரணமாக ரங்கபாஷ்யம் திகழ்ந்துள்ளார். அவர் மறைந்துவிட்டார் என நாம் நினைக்கிறோம். ஆனால், அவர் விட்டுச்சென்ற நினைவுகளால் நம்மோடு அவர் வாழ்ந்துவருகிறார்” என்றார்.

இந்த விழாவில் டாக்டர் ரங்கபாஷ்யத் தின் மனைவி சித்ரா ரங்கபாஷ்யம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.ஆனந்த கண்ணன், அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் மோகன் செல்லப்பா, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுதா சேஷையன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ‘டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்’ நூலின் ஆசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம், ‘வார்டு 10 - ரிமெம்பரிங் ரங்கபாஷ்யம்’ நூலின் ஆசிரியர் வி.ஆர்.தேவிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x