Published : 12 Dec 2022 04:14 PM
Last Updated : 12 Dec 2022 04:14 PM

சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கணவர் தரப்பில் 2017-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என 2017 ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, 2021-ல் சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கணவர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், காலதாமதமாகவும், 2021 ஆகஸ்டில் நீதிபதியாக பொறுப்பு ஏற்றவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கணவர் தரப்புக்கு 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து, அத்தொகையை இரண்டு வாரங்களில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார். மேலும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆண்டை சரி பார்க்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்ட உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x