Published : 02 Dec 2016 08:11 AM
Last Updated : 02 Dec 2016 08:11 AM

துறையூர் முருங்கப்பட்டி வெடி மருந்து நிறுவனத்தை தடை செய்ய மக்கள் கோரியும் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருங்கப்பட்டியில் நேற்று 18 பேர் பலியாகக் காரணமான தனியார் வெடி மருந்து நிறுவனத்தை தடை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, அந்த வெடி மருந்து நிறுவன பகுதியில் நேற்று திரண்டிருந்த பொதுமக்கள் கூறியபோது, “இந்த வெடி மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்யக் கோரி பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.

இது தொடர்பாக ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் கேட்டபோது, “வெடி மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மருந்து கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டுவிட்டதாகவே மக்கள் மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக துறை ரீதியான ஆய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இயங்க வாய்ப்பு குறைவு.

மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் இந்த வெடி மருந்து தயாரிப்பு நிறுவனம் வருகிறது. எனவே, வெடி மருந்துகளை இங்கிருந்து அனுப்புவதற்கான தடையின்மைச் சான்று மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது” என்றார்.

வெடிமருந்து தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு கட்டிடம் முழுமையாக இடிந்து சேதமடைந்ததால், அந்த நிறுவனத்தின் வளாகம் முழுவதும் சிதறிக்கிடந்த கற்கள்.

வெடி மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதேவேளையில், உள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். 8 மணி நேரம் வீதம், 3 ஷிப்டுகளாக ஆலை இயங்கி வருகிறது. ஷிப்டுக்கு சுமார் 80 தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என பணியாற்றி வந்துள்ளனர்.

அங்கு திரண்டிருந்தவர்களில் சிலர் கூறும்போது, “சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஆலையில் நடந்த முதல் பெரிய விபத்து இதுதான்” என்றனர்.

முற்றுகையிட்ட மக்கள்

முருங்கப்பட்டி கிராம மக்கள் துறையூர்- ஆத்தூர் சாலையில் திரண்டனர். விபத்து குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த வெடி மருந்து தயாரிப்பு நிறுவன நிர்வாக அதிகாரி சந்திரசேகரின் காரை மறித்து, அதைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், ஆலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வேனும் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளானது.

தகவலறிந்து வந்த போலீஸார், ஆட்சியர் ஆகியோரின் வாகனங்களையும் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து திரளான போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் வந்தபோதும் மக்கள் முற்றுகையிட்டனர்.

விபத்து நடந்த இடத்துக்கு வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை, முற்றுகையிட்டதை அடுத்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்.

விபத்து சேதங்களைப் பார்வையிட்டு முடித்த பிறகு சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு அமைச்சர் புறப்பட முயன்றார். அப்போது, பொதுமக்கள் வெடி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பிரதான வாயில் முன் திரண்டிருந்ததால் அமைச்சரால் வெளியே செல்ல முடியவில்லை. வெடி மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அமைச்சர், ஆட்சியர், போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் அமைதியாயினர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நேற்று காலை ஷிப்ட் 6 மணிக்குத் தொடங்கிய ஒன்றேகால் மணி நேரத்துக் குப் பிறகு காலை 7.20 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்த 18 பேர் உடல் சிதறி பலியானதாகக் கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பிற பகுதி களில் பணியில் இருந்த சுமார் 15 பேர் கட்டிட சிதறல்கள் விழுந்ததில் லேசான காயமடைந்தனர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் முருங்கப்பட் டியில் குவிந்தனர். பெண்கள், முதியவர் கள் அனைவரும் வேலைக்குச் சென்ற தங்கள் உறவினரின் நிலை குறித்து தகவல் தெரியாமல் கதறி அழுதனர்.

அதிகாரிகள் வருகை

மீட்புப் பணியில் 5 பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தோண்டத் தோண்ட சிதைந்த மற்றும் கருகிய நிலையிலான சிறு சிறு உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்தன. வெடி விபத்தில் உடல்கள் சிதறியிருக்கலாம் என்றும், இனி தோண்டுவது பயனளிக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இடிபாடுகளுக்குக் கீழே வெடி மருந்து இருந்தால் மீண்டும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு, மீட்புப் பணிகள் நேற்று மாலை நிறுத்தப்பட்டன. மீண்டும் இன்று (டிச.2) மீட்புப் பணிகள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சிவகாசி மற்றும் சென் னையில் இருந்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழுவினர் வெடி விபத்து ஏற்பட்ட முருங்கப்பட்டிக்கு ஆய்வுக்காக வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அமைச்சர்கள் ஆறுதல்

வெடி விபத்தில் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோ பர் கபில், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப் பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

வெடி மருந்து ஆலை உரிமையாளர் தலைமறைவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன்கள் விஜயகண்ணன், வெற்றிவேல். இவர்களில் உப்பிலியாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டியில் விஜயகண்ணனுக்குச் சொந்தமான வெடி மருந்து ஆலையில்தான் நேற்று விபத்து நேரிட்டது.

இந்நிலையில், உப்பிலியாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சைமலை செங்காட்டுப்பட்டி பகுதியில் இதேபோன்று மற்றொரு ஆலையை விஜயகண்ணனின் சகோதரர் வெற்றிவேலுவும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலைக்கும் செங்காட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே விஜயகண்ணன், வெற்றிவேல் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முருங்கப்பட்டி ஆலை மேலாளர் ராஜகோபால் உட்பட ஆலை நிர்வாகிகள் சிலரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வெடி விபத்தில் பலியான 18 பேர் விவரம்

உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர்.

துறையூர் முருங்கப்பட்டி வெடி விபத்தில் பலியான 18 பேர் விவரம்:

நாகநல்லூரைச் சேர்ந்த ர.பிரதீப்(22), ரா.ராஜபிரகாசம்(30), த.கார்த்திக்(31), முருங்கப்பட்டியைச் சேர்ந்த நகுலேசன்(40), வா.ரவிச்சந்திரன்(34), சதீஷ்(23), த.பாதர்பேட்டையைச் சேர்ந்த த.ரவீந்திரன்(40), ஆர்.கே.சுப்பிரமணி(45), கொப்பம்பட்டி அ.சீனிவாசன்(48), ப.சம்பத்(38), டாப் செங்காட்டுப்பட்டி பெ.ஆனந்தன்(31), வைரிச்செட்டிபாளையம் மு.கார்த்திக்(19), வெங்கடாஜலபுரம் பெ.செல்வகுமார், செந்தாரப்பட்டி பெ.பூபதி(27), சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த க.முருகன்(30), சு.அசோகன்(32), பொ.செல்வகுமார்(36), ஜே.லாரன்ஸ்(43).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x