Published : 02 Dec 2016 11:10 AM
Last Updated : 02 Dec 2016 11:10 AM

கரூரில் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாமதமாகும் இழப்பீடு

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

*

கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதுடன், கரூரின் வீட்டு உபயோக ஜவுளி ஜஏற்றுமதியை அதிகரிக்க பொதுசுத்திகரிப்பு நிலையத்தை அரசே அமைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கைத்தறி நகரமாக அறியப்பட்ட கரூர், கடந்த 70-களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் திரைச்சீலை, ஏப்ரான், கையுறை, டேபிள் மேட் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குப் பெயர் பெற்ற நகரானது. கரூரில் கைத்தறியுடன், சாயமிடுதல் தொழிலும் பின்னிப் பிணைந்திருந்தது. கரூரில் பல ஆண்டுகாலமாக சாயமிடும் தொழில் நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் கைகள் மூலமே சாயமிடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஏற்றுமதி காரணமாக 90-களில் சாயப்பட்டறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், இயந்திர சாயமிடலும் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் பல்வேறு விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டன.

போராடத் தொடங்கிய விவசாயிகள்

அமராவதி ஆற்றங்கரையோரமான கரூர் கருப்பம்பாளையம், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், ஆண்டாங்கோவில் பகுதிகளில் செயல்பட்ட சாயப்பட்டறைகள் முறையான வழிகாட்டுதல் இன்றி சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் அமராவதி மற்றும் ராஜவாய்க்கால் மாசுப்பட தொடங்கின. இதனால் விவசாய கிணறுகள், நீர் ஆதாரங்கள், நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடத் தொடங்கினர்.

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் இழப்பீட்டு ஆணையம் அமைக்கப்பட்டு ரூ.6.36 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் ரூ.36 லட்சம் செலுத்திய நிலையில், தடை உத்தரவு பெற்றதால் அவர்கள் செலுத்திய இழப்பீட்டு தொகை இன்று வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக சாயப்பட்டறைகள் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி (ஆர்.ஓ.) செய்து பயன்படுத்த உத்தரவிடப்பட்டதையடுத்து, பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இருந்தாலும் முறையாக மறுசுழற்சி செய்யாமல் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டதால் விவசாயிகள் தொடர்ந்த வழக்கின் காரணமாக சாயக்கழிவு நீரை ஒரு சொட்டுக்கூட வெளியேற்றாத (பூஜ்ய கழிவு வெளியேற்றம்) சாயப்பட்டறைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற உத்தரவால் மூடல்

இதையடுத்து கரூரில் செயல்பட்ட சாயக்கழிவு மறுசுழற்சி செய்ய இயலாத 480-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் நீதிமன்ற உத்தரவு காரணமாக மூடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஆர்.ஓ. மூலம் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் பூஜ்ய கழிவு முறையில் செயல்படும் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

சாயப்பூங்காவுக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அது கைவிடப்பட்டு கரூர் மாவட்டம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய ரூ.700 கோடி மதிப்பிலான சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் போதுமான வரவேற்பு இல்லாததால் தொடங்கப்படாமல் உள்ளது.

நிரந்தர தீர்வு காணவேண்டும்

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கவும், பூஜ்ய கழிவு எனக்கூறி செயல்படும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை வெளியேற்றுவதை தடுக்கவும், மூடப்பட்ட சாயப்பட்டறைகளில் அவ்வப்போது சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் சாயமிடும் பணிகளை தடுத்த நிறுத்தவும், சாயப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே விவசாயிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இழப்பீட்டு ஆணையம் அமைப்பு...

கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் எம்.ராமலிங்கம் கூறியதாவது: சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதையடுத்து இழப்பீட்டு ஆணையம் அமைக்கப்பட்டு 2004ம் ஆண்டு வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.6.36 கோடி இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. இதற்கான தொகையை சாயப்பட்டறை உரிமையாளர்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து முதல் தவணையாக ரூ.36 லட்சம் வழங்கிய சாயப்பட்டறை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் அதற்கு தடை வாங்கினர். தடை நீக்கப்பட்ட பிறகும் அந்த இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவே இல்லை. தற்போது பூஜ்ய கழிவு என செயல்படும் சாயப்பட்டறைகள் அவ்வப்போது சாயக்கழிவு நீரை சட்டவிரோதமாக வெளியேற்றுகின்றன. இதனால் விவசாய கிணறுகளில் சாயக்கழிவு நீர் வெளியாகிறது. மூடப்பட்ட சாயப்பட்டறைகளிலும் சட்டவிரோதமாக அவ்வப்போது சாயமிடுதல் பணி மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை தடுத்து, விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உற்பத்திச் செலவு, கால விரயம்...

கரூர் ஜவுளி ஏற்றுமதி சங்க செயற்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு கூறியதாவது: கரூரில் செயல்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் ஜவுளி ஏற்றுமதி தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல்களுக்கு சாயமிடுவதற்கு பவானி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்லவேண்டி உள்ளது. இதனால் உற்பத்தி செலவு, காலவிரயம் ஏற்படுகிறது. எனவே கரூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

கரூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து கூறியதாவது: கரூரில் சாயக்கழிவு மறுசுழற்சி உள்ள 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 10-க்கும் மேற்பட்டவை ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு சொந்தமானவை என்பதால் அவர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் ஜவுளிகளை வாங்கும் வெளிநாட்டினர் சாயப்பட்டறைகளையும் அங்கு நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களையும் பார்வையிட்டே ஆர்டர்களை அளிப்பதால் அவற்றில் தவறு நடக்க வாய்ப்பில்லை.

சாயப்பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அது கைவிடப்பட்டது. அதன்பின் 4 மாவட்டங்களை ஒன்றிணைத்து ரூ.700 கோடியில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அரசே பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் சாயக்கழிவு நீர் லிட்டருக்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்து சுத்திகரிப்பு செய்யவோ அல்லது சுத்திகரிப்பு செய்த நீரை திரும்ப சாயப்பட்டறைகளுக்கு வழங்கும் வகையிலோ திட்டத்தைச் செயல்படுத்தினால் சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

சட்டவிரோத செயல்பாடு தடுப்பு...

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் எஸ்.ராஜேந்திரபாபு கூறியபோது, “ஆர்.ஓ. சுத்திகரிப்பு வசதியுடன் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அவையனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. மூடப்பட்ட சாயப்பட்டறைகளில் சட்டவிரோதமாக செயல்படுவது தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இழப்பீட்டு ஆணையத்தில் செலுத்தப்பட்ட ரூ.36 லட்சம் மற்றும் மொத்த தொகையான ரூ.6.36 கோடி ஆகியவற்றை விவசாயிகளுக்கு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x