Published : 06 Dec 2016 03:07 PM
Last Updated : 06 Dec 2016 03:07 PM

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் சமூக நிகழ்ச்சி எனது திருமணம்தான்: அன்புமணி தகவல்

1991-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் சமூக நிகழ்ச்சி எனது திருமணம்தான் என்று அன்புமணி கூறியுள்ளார்.

மேலும், எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்தவர் ஜெயலலிதா என்று அன்புமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து இன்று அன்புமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அடைந்தேன். அவரது மறைவுச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை இந்திராகாந்திக்கு அடுத்து தமது வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலம் நிரூபித்த தலைவர் ஜெயலலிதா ஆவார். இந்திராகாந்தி அரசியல் பின்புலமுள்ள குடும்பத்திலிருந்து வந்த நிலையில், எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்தவர் ஜெயலலிதா.

ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் ஜெயலலிதா திகழ்ந்தார். தனிப்பட்ட முறையில் என் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா. 1991-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் சமூக நிகழ்ச்சி எனது திருமணம் தான்.

கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையில் நடந்த எனது திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அதேபோல், 2001-ம் ஆண்டில் பலமுறை என்னை அழைத்து அரசியல், திரைப்படம், விளையாட்டு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறார்.

ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x