Last Updated : 09 Dec, 2016 09:10 AM

 

Published : 09 Dec 2016 09:10 AM
Last Updated : 09 Dec 2016 09:10 AM

அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? - காய் நகர்த்தும் தலைவர்கள்

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் 75 நாட்களாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். அவரது மரண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 31 அமைச் சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது.

செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிகார மாற்றம் சுமுகமாக நடந்தாலும் அதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் அடுத்து வரப்போகும் மாற்றங்கள், குழப்பங்களுக்கு கட்டியம் கூறுவதுபோல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் சென்னை வந்து, இங்கேயே முகாமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத் துக்கு காலை 7 மணிக்கே வந்த வெங்கய்ய நாயுடு, உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து அனைத்தையும் கவ னித்து வந்தார். அவரது ஆலோசனையின்படியே ஓ.பன்னீர் செல்வம் புதிய முதல்வராக பதவியேற் றுள்ளார்.

இன்னும் 7 மாதங்களில் குடியரசுத் தலை வர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வுள்ளது. இத்தேர்தலில் 50 எம்.பி.க்கள், 136 எம்எல்ஏக்களை கொண்டுள்ள அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மூலம் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக காய் நகர்த்துகிறது. இதற்காக சசிகலா உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளும் ஆயுதமாக பயன் படுத்தப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை உறுதிப்படுத்துவதுபோல ஜெய லலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்தும் ஆறுதல் கூறினார். சசிகலாவின் கணவர் நடராஜனை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் மோடியிடம் அறிமுகப்படுத்தினார். அதை மோடி கவனிக்காதபோதும் தொடர்ந்து மூன்று, நான்கு முறை நடராஜனை அறிமுகப்படுத்த இல.கணேசன் முயற்சித்தார். அந்த முயற்சி, ஏதோ நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அதிமுகவை தன் வசப் படுத்த காங்கிரஸும் முயற்சித்து வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதிமுகவை விமர்சிக்காமல் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். நடராஜன் மூலம் திருநாவுக்கரசர் செய்த ஏற்பாட்டின் பேரிலேயே ராகுல் காந்தி திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, அவரது இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி, திருநாவுக்கரசர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திருநாவுக்கரசர் தனது இரு கைகளிலும் பூக்களை எடுத்துக் கொடுக்க ஜெயலலிதாவுக்கு நடராஜன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “1967-ல் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் 50 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி, கடந்த 2014 தேர்தலில் 4.3 சதவீத வாக்குகளையே பெற்றது. எனவே, தற்போதைய சூழலில் அதிமுகவை வசப்படுத்தினால் 39 எம்.பி.க்களைக் கொண்ட தமிழகம் 2019-ல் காங்கிரஸுக்கு கை கொடுக்கும் என ராகுல் காந்தி திட்டமிடுகிறார். அதற்கான வேலைகளை நடராஜன் மூலம் திருநாவுக்கரசர் மேற்கொள் ளவும் வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு பல் வேறு போராட்டங்களை நடத்தி, பலரின் எதிர்ப்புகளை மீறி முதல்வர் பதவியை பிடித் தவர் ஜெயலலிதா. கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். அவரது மறைவால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பதை தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் உணர்ந்துள்ளன. எனவேதான் அதிமுகவை வசப்படுத்த இரு கட்சிகளும் போட்டி போட்டு காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் காங்கிரஸ், பாஜகவுக்கு வெற்றி கிடைக்குமா அல்லது ஜெயலலிதாபோல யாராவது ஒருவர் தோன்றி அதிமுகவின் தனித் தன்மையை காப்பாற்றுவாரா? என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிய வரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x