Published : 21 Dec 2016 08:55 am

Updated : 21 Dec 2016 08:55 am

 

Published : 21 Dec 2016 08:55 AM
Last Updated : 21 Dec 2016 08:55 AM

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’: மோசடி வங்கி அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் எச்சரிக்கை

ரூ.3 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் மேலாளருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

மத்திய அரசு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தாலும் அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகளே எதிர்மறையாக உள்ளனர். பொதுமக்கள் கொதித்து எழுந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற நிலையாகி விடும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் கிருஷ்ணதாஸ் என்பவர் கடந்த 2001-04 காலகட்டத்தில் தனியார் நிறுவனத்துக்கு போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கியதில் ரூ.3.26 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன்படி கிருஷ்ணதாஸ் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்ற தனியார் நிறுவனம் மற்றும் கோவர்தன், வி.சுந்தர்ராஜன், எஸ்.கிரிஜா, ஹரினி வாசினி, கார்த்திகா, ராஜேஸ்வரி, வினோத், சண்முகம், ராஜாராம், முருகன், ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ 11-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடசாமி நேற்று அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு: இந்த வழக்கில் சிபிஐ தனது குற்றச்சாட்டுகளை சரிவர நிரூபித் துள்ளது.

மத்திய அரசு பண மதிப்பு நீக்கம் போன்ற நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகளே அதற்கு எதிர்மறையாக செயல்படு கின்றனர். வங்கி முறைகேடு களுக்கு மூத்த அதிகாரிகளே உடந் தையாக இருப்பதால் தான் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. இது நாட்டுக்கு பேரிழப்பு.

பொதுமக்கள் கொதித்து எழுந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற நிலையாகி விடும் என்ற அச்ச உணர்வு ஏற்படு கிறது. அலகாபாத் நகராட்சி யில் உள்ள 119 துப்பரவு பணி யாளர் பணியிடத்துக்கு 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் அதிகம் படித்தவர்கள். இளைஞர் கள் வேலைக்காக திண்டாடும் போது, வங்கி அதிகாரிகள் விதி முறைகளை காற்றில் பறக்கவிட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

போலி ஆவணங்கள் மூலம் பெரும்புள்ளிகளுக்கு கோடிக் கணக்கில் கடன் கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரமே சீர் குலைகிறது. நாடும் வராக்கடனில் தத்தளிக்கிறது என மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அத்தகைய வங்கி அதி காரிகளையும், பெரும்புள்ளி களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். வயோதிகத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு கரிசனம் காட்டக்கூடாது. அப்போது தான் இதுபோன்ற குற்றங்களை ஓரளவாவது குறைக்க முடியும்.

ஒருபுறம் ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகளை வரிசையில் நி்ன்று பெற முடியாமல் பலர் இறந்துள்ளனர். மறுபுறம் ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகள் பெரும்புள்ளிகளின் குளியலறை யிலும், சொகுசு அறைகளிலும், கார்களிலும் பதுக்கி வைக்கப் பட்டிருப்பது வேதனை தருகிறது.

சாதாரண கடனுக்காக ஏழை களை மிரட்டி வசூலிக்கும் வங்கி அதிகாரிகள், தங்களின் ஆதாயத்துக்காக பெரும்புள்ளி களிடம் அதுபோல நடப்பதில்லை.

வழக்கு விசாரணை காலதாமதம் ஆவதும் இந்த முறைகேடுகளுக்கு ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. வங்கி மோசடி தொடர் பான வழக்குகளை விரைவாக விசாரித்து உடனுக்குடன் தீர்ப் பளித்தால் மோசடியாளர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.

மேலாளருக்கு 5 ஆண்டு சிறை

இந்த வழக்கில் வங்கி மேலாளர் கிருஷ்ணதாஸுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். மோசடியில் ஈடுபட்ட மெசர்ஸ் மார்ஸ் கம்யூனிகேஷனுக்கு ரூ.58 லட்சம் அபராதமும், சுந்தரராஜன், ஹரினி வாசினி, கார்த்திகா, வினோத் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதமாக ரூ.1 கோடியே 92 லட்சமும் விதிக் கப்படுகிறது.

இதன்மூலம் மொத்த அபராதத் தொகை ரூ.3 கோடியில் ரூ.2 கோடியே 85 லட்சத்தை வங்கிக்கு ஏற்பட்ட இழப்பீடாக வழங்க வேண்டும். கிரிஜா, ராஜேஸ்வரி, ராஜேந்திரன் ஆகியோர் விடு விக்கப்படுகின்றனர். இவ்வாறு தனது உத்தரவில் குறிப்பிட் டுள்ளார்.


மோசடி வங்கி அதிகாரிகள்சிபிஐ நீதிமன்றம் எச்சரிக்கைரூ.3 கோடி இழப்புமேலாளருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x