Published : 18 Dec 2016 10:26 AM
Last Updated : 18 Dec 2016 10:26 AM

பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரம் தூர்ந்ததால் புதுப்பட்டினம் குடியிருப்புகளை சூழ்ந்த பாலாற்று வெள்ளம்: தூர்வாரி சீரமைக்க மக்கள் கோரிக்கை

பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் தூர்ந்து போனதால், புதுப்பட்டினத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. எனவே, பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வார்தா புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், காட்டாங்கொளத்தூர் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன. இந்த உபரிநீர் அனைத்தும், கால்வாய் மூலம் செங்கல்பட்டு அருகே நீஞ்சல் மடுவில் கலந்து பாலாற்றை சென்றடைந்தன. ஒரேநாள் இரவில் பெய்த கனமழை காரணமாக நீஞ்சல் மடுவிலும், பாலாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாலாற்றங்கரையோரம் உள்ள திருக்கழுக்குன்றம் மற்றும் செய்யூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

பாலாற்றில் செல்லும் தண்ணீர் புதுப்பட்டினம் அடுத்த வாயலூர் பகுதியில் கடலில் கலக்கிறது. இப்பகுதியில் பக்கிங்காம் கால்வாயும் குறுக்கிடுகிறது. பக்கிங்காம் கால்வாய் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால், பாலாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது கால்வாயின் தண்ணீர் முகத்துவாரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பக்கிங்காம் கால்வாயில் செல்ல வேண்டிய தண்ணீர், புதுப்பட்டினம் அடுத்த ஆர்எம்ஐநகர், இந்திரா நகர், பல்லவன் நகர், ஊஸ்டர் நகர், சதாம் உசேன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயில் புகுந்து, 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது. கழிவுநீரும் அடித்து வரப்பட்டதால் கடும் துர்நாற்றம் வீசியது.

எனவே, பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமாகாவின் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கிங் உசேன் கூறியதாவது: பாலாற்றில் 1987-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், முகத்துவாரம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் மண் படிந்து தூர்ந்து போனது. அதன்பின், 2015-ம் ஆண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்காததால், பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர் முகத்துவாரத்துக்கு செல்ல முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்தது.

அதிகாலை நேரத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், அருகில் இருந்த கிராம மக்கள், இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு உதவி செய்து மாற்று இடங்களில் தங்க வைத்தனர் என்று அவர் கூறினார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கேட்டபோது, ‘செங்கல்பட்டு சார் ஆட்சியர் மூலம் புதுப்பட்டினம் பகுதியில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x