Published : 26 Nov 2022 12:55 PM
Last Updated : 26 Nov 2022 12:55 PM

சென்னையில் நடப்பாண்டில் 442 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் கைது: காவல்துறை

கோப்புப்படம்

சென்னை: சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 442 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 15 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 442 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஜன.1 முதல் 2022 நவ.25 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 265 குற்றவாளிகளும், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 100 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 59 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 442 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவ.19 முதல் நவ.25 வரையிலான ஒரு வாரத்தில் 15 குற்றவாளிகள், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x