Published : 09 Dec 2016 11:05 am

Updated : 14 Dec 2016 12:18 pm

 

Published : 09 Dec 2016 11:05 AM
Last Updated : 14 Dec 2016 12:18 PM

நொய்யல் இன்று 1: நொய்யல் இன்று எப்படி இருக்கிறது?- பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

1

அந்நிய நாட்டவர், அடுத்த மாநிலத்தவர் நீர் தர மறுப்பதற்காக ஏராளமான போராட்டங்களை, நீதிமன்ற வழக்குகளை பல்வேறு நதிகளின் வரலாறு கண்டிருக்கிறது. கண்டு கொண்டுமிருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்திலேயே உருவாகி, கூறுபோடப்பட்டு, அழிந்து நாசமாகும் நதியாக சபிக்கப்பட்டிருக்கிறது நொய்யல். இப்பகுதியை ஆரண்யக் காடாக்கி, பல்லுயிர் பெருக்கத்துக்கு துணை நின்ற இந்நதி இன்று, ‘காணாமல் போன ஆறு!’, ‘செத்த ஆறு!’ , ‘சாக்கடையாறு!’, ‘கோவையின் கூவம்!’ என்றெல்லாம் பரிகாசிக்கப்படுவதோடு, ‘நொய்யலா? அப்படியொரு நதியே இல்லை!’ என்றெல்லாம் கருத்துகளும் பகிரப்படுகின்றன. இது நிஜந்தானா? ‘நிச்சயம் இல்லை!’ என்கிறது இந்நதி வரலாறு. அதை ஆதியோந்திடமாக உறுதிப்படுத்துகிறது, ‘நொய்யல் இன்று!’ என்கிற நதிப் பயணம்.

நொய்யலின் தோற்றுவாய்

‘நொய்யல் எங்கே உருவாகிறது?’ என்ற கேள்விக்கு, ‘அதோ மேகோட்டு மூலையில் உசரமா வளைஞ்சு நெளிஞ்சுபோகுதில்ல மலைகள். அதுல தெற்கே தர்மலிங்கேஸ்வரர் மலை, அய்யாசாமி மலை. வடக்கே மருதமலை, குருடி மலை. இதுகளுக்கு நடுவுல கூமாச்சிய பெரிசா நிக்குதே. அதுதான் வெள்ளியங்கிரி. அந்த உச்சியில உருவாகுது இந்த ஆறு! என்று அந்தக்காலத்தில் விளக்குவார்கள் கோவை நாட்டுப்புற மக்கள்.

வெள்ளியங்கிரிக்கு தென்கைலாயம் என்று பெயர். சித்ரா பெளர்ணமியன்று இரவு முழு நிலா வெளிச்சத்தில் தடி ஊன்றி இங்குள்ள ஏழுமலைகளில் ஏறிச்சென்று சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து திரும்புகிறார்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள். இப்பகுதியில் பல்வேறு வன விலங்குகளும் உலவுகின்றன.

ஆறாக மாறும் ஆண்டிச்சுனை

இந்த மலையின் உச்சியில் உள்ள சீதை வனத்தின் நடுவே சுளித்து ஓடும் சிற்றருவி தேங்கி, ஓரிடத்தில் ஆண்டிச்சுனை என்ற பெயரில் முகிழ்க்கிறது. அது மட்டும்தான் நொய்யலாற்றை உருவாக்குவதாக ஆதிகாலத்தில் மக்கள் நம்பினார்கள். உண்மையில் நொய்யலின் தோற்றுவாய் சுயம்புநாதருக்கும் அப்பால் மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசும்புல் வெளிகளாய், சோலை வனங்களாய், பசுமை மாறாக்காடுகளாய் விரிந்துள்ளது. அவை ஏராளமான நீர்ச்சுனைகள், நீருற்றுகளை உருவாக்குகின்றன. அது 10 கிலோமீட்டர் தொலைவுக்கு சுளித்து நெளித்து, இடையில் காடுகளில் உருவாகும் பல கிளைஓடைகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு நீலியாறு என்று பெயர்சூடி தாணிக்கண்டி என்ற பழங்குடி கிராமத்துக்குள் நுழைகிறது..

நீர்வீழ்ச்சிகள்

இந்த நீலியாறுக்கு ஆதாரசுருதியான நீரோடைகளுக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கடுக்கான மலைக்காடுகளில் பொங்கும் நீருற்றுகள், நீரோடைகளாக மாறி நீலிக்கு இருமருங்கும் இரண்டு ஜடாமுடிகள் போல் கீழிறங்குகின்றன. அவை முறையே கோவைக்குற்றாலம் (சாடியாத்தா ஆறு அல்லது பெரியாறு), வைதேகி நீர்வீழ்ச்சி (தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி) ஆகியவற்றை உருவாக்குகின்றன. இப்படியாக 3 கிளைகளாக சுமார் 3 கிலோமீட்டர் இடைவெளிவிட்டு வரும் முக்கிய நீரோடைகள், ஆங்காங்கே வெவ்வேறு மலைத் தொடர்களில், காடுகளில் உருவாகி ஓடிவரும் சிற்றோடைகளையும் இணைத்துக் கொண்டே பயணிக்கிறது. இடையில் நீலியாறு தாணிக்கண்டி கிராமத்திற்கு முன்பே இரண்டாகப் பிரிகிறது. அதில் சிறுபகுதி தெற்கே பிரிந்து வைதேகி அருவி வரும் நீர்வழியில் இணைந்து சிற்றாறு என பெயர் பெறுகிறது.

நீலியாற்றின் பிரதான பகுதி கோவை குற்றாலம் எனப்படும் சாடியாத்தா ஆறுடன் இணைந்து பெரியாறு என பெயர் பெறுகிறது. இப்படி ஓடிவரும் சின்னாறு, பெரியாறுகள், தொம்பிலி பாளையம் கூடுதுறையில் ஒன்றிணைகிறது. இந்த இணைவுக்கு பின்னரே இந்நதி நொய்யல் எனப் பெயர் பெறுகிறது. அதற்கு முன்பு ஓடிவந்த நீலியாறு, சாடியாத்தா ஆறு, தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி உள்ளிட்ட நீரோடைகளின் பயண தூரம் மட்டும் சுமார் 15 முதல் 20 கிலோமீட்டர் தூரம். இந்த நீரோடைகள் உருவாகும் பகுதியில்தான் கேரள எல்லை தொடங்குகிறது.

இப்படி நொய்யல் தனக்கான பெயரைப் பெறுவதற்கு முன்பே எப்படி பல்வேறு நீரோடைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஓடி வந்ததோ, அதேபோல் தொம்பிலிபாளையத்தில் நொய்யலாக உருமாறிய பின்பும் 167 கிலோமீட்டர் தொலைவு தனது பயணத்தில் தெற்கும், வடக்குமாக வந்து சேரும் நூற்றுக்கணக்கான காட்டாறுகளை, நீரோடைகளை ‘பள்ளங்கள்’ என்ற பெயரில் தன்னுடன் இணைத்துக் கொண்டே செல்கிறது.

கால்நடை வளர்ப்பு

அந்த பள்ளங்களுக்கு (நீரோடைகள்) மக்கள் ஏற்படுத்திய தொந்தரவும், அதனால் அந்த பள்ளங்கள் மக்களைக் கொன்ற சம்பவங்களும் நிறைய உள்ளன. அதில் சமீபத்திய 2 துயரங்கள் முக்கியமானவை. அதற்கு முன்னர் இந்நதி பொங்கி அழித்த காட்டாறாகவே விளங்கியிருக்கிறது. அதைப்பற்றி தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் கூறியது: மலையும், காடும் சார்ந்த பகுதி இந்த கொங்குநாடு. கால்நடைகள் வளர்ப்புக்கேற்ற நிலமாகவே இது விளங்கியிருக்கிறது. அதை இங்கு கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் நிருபித்துள்ளன.

அவிநாசி வண்ணத்தாங்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்மாறி உருவங்கள் சில செமிஃபாசில் கிடைக்கப் பெற்றது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆண்டுகளுக்குள் பல்லாயிரக்கணக்கான மாடுகள் குவியலாக வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அவை செமி ஃபாசிலாகியிருக்க வேண்டும் என்கிறது அதன் ஆய்வு. கிமு 5-ம் நூற்றாண்டில் படித்த மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வடநாட்டு எழுத்து மற்றும் தமிழ்மரபு எழுத்துகளுடன் கூடிய ஓடுகள் நொய்யல் கரைகளில் கிடைத்துள்ளன.

கிரேக்கர்கள், ரேமானியர்கள் வடநாட்டுக்கு வாணிபம் நிமித்தம் வந்துள்ளனர். அவர்களுடன் பண்டமாற்று வாணிபம் நடைபெற்றுள்ளது.

9-ம் நூற்றாண்டு ஏரிகள்

சேரர் பிரதிநிதிகள் கி.பி. 9-ல் வந்துள்ளனர். அவர்களே முதலில் ஏரிகளை வெட்டி, பள்ளத்திலிருந்து மேட்டுக்கு குழாய்கள் மூலம் நீரை கொண்டுசென்று, மீண்டும் பள்ளத்துக்கு குழாய்கள் மூலம் கீழே கொண்டு வந்துள்ளனர். கி.பி. 12-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்கள் ஆட்சி. பாண்டியர்களுடன் பெண் கட்டி, பெண் கொடுத்ததால் உறவினர்களாகிறார்கள். அவர்கள் மூலம் தொழில்நுட்பம் அறிந்து நொய்யல் நதியின் குறுக்கில் அணைகள், குளங்கள், வாய்க்கால்கள், மதகுகள் ஏற்படுத்துகிறார்கள் இது முட்டம் கோடி முப்பத்தியிரண்டு அணை என சோழன் பூர்வ பட்டயத்தில் உள்ளது.

நொய்யல் ஆரம்பிக்கும் முட்டம் (தொம்பிலிபாளையம்) பகுதியிலிருந்து இந்நதி காவிரியுடன் கலக்கும் நொய்யல் கிராமம் வரை 32 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்பதற்கான சான்று இது.

நொய்யலைப் பொறுத்தவரை திடீர் வெள்ளப்பெருக்கு 30, 40 வருட இடைவெளிக்கு ஒருமுறை இருந்துள்ளது. எனவே இது பொங்கி அழித்த காட்டாறு என்றும் பெயர் பெற்றுள்ளது. இருபுறம் மேடு, நடுவே பள்ளம், கீழே சரிவு என்று இருப்பதால் குதிபோட்டே செல்கிறது நொய்யல். ‘நின்மலை தோன்றி நின்கடல் மண்டும் காஞ்சியாறு!’ என்ற வரி பதிற்றுப்பத்தில் வருகிறது. ‘நன்காஞ்சியாறு’ என்பது (வைதேகி நீர்வீழ்ச்சி) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து நொய்யலுக்கு வரும் ஒரு கிளை. எனவே காஞ்சி மாநதி என்று சேரர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது.

நொய்யல் என்பதற்கு சலிக்கவே தேவையில்லாத மணலை கொண்டுள்ள ஆறு என்றும் சொல்கிறார்கள். பொங்கி வரும் ஆறு நுண்மையான மணலை படிய விட்டுச் செல்வதால் இந்த பெயரும், இது காவிரியில் கலக்கும் இடத்தில் அதிகமான மணலைப் படிய விடுவதால் அந்த பகுதிக்கு நொய்யல் கிராமம் என்ற பெயரும் வந்திருக்கலாம் என்பதேயே வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.

பயணிக்கும்...

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

நொய்யல் இன்று எப்படி இருக்கிறதுபொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்ஆறு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author