Published : 23 Nov 2022 06:08 PM
Last Updated : 23 Nov 2022 06:08 PM

ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு பேரணி தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

கோப்புப்படம்

சென்னை: ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் அணிவகுப்பு பேரணியை உள்ளரங்கு மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் கடந்தஅக்.2-ம் தேதி அணிவகுப்பு பேரணிநடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் அனுமதி கோரிஉயர் நீதிமன்றத்தில் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 50 இடங்களிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அணிவகுப்பு பேரணியைநடத்திக்கொள்ள கடந்த செப்டம்பர்மாதம் உத்தரவிட்டார். இதற்கிடையே பாப்புலர் பிரன்ட் ஆஃப்இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதிக்காததால், நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் நிலைமை சீரான பிறகு அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ளலாம், எஞ்சிய 41 இடங்களில் உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் அல்லது சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்புபேரணியை நடத்த வேண்டும் என கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டார்.அதையடுத்து ஆர்எஸ்எஸ் பேரணி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தனி நீதிபதியின்உத்தரவை எதிர்த்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஜி.சுப்பிரமணியன் சார்பில் வழக்கறிஞர் ரபுமனோகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது. அதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த அக்.2 அன்று ஆர்எஸ்எஸ் பேரணிஅமைதியான முறையில் நடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுத்தது சட்ட விரோதமானது. ஆனால் இதேகாலகட்டத்தில் பிற அரசியல் கட்சியினருக்கு போராட்டம், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார்.

எனவே உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மட்டுமே இந்த அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அமைதியான முறையில் பேரணியைநடத்த அனுமதி வழங்க வேண்டும்என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x