Published : 22 Nov 2022 04:52 PM
Last Updated : 22 Nov 2022 04:52 PM

பதவி, அதிகாரம், தமிழக பாஜக... - அண்ணாமலை நடவடிக்கையின் பின்னணி என்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்

யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதில் கட்டுப்பாடு, சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து விசாரணை, காயத்ரி ரகுராம் 6 மாத காலம் நீக்கம் என அடுத்தடுத்து கட்சிக்குள் அதிரடி காட்டியுள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.

கட்சி என்று இருந்தால் உள் விவகாரங்கள் இருக்கத்தானே செய்யும் என்பதுபோல் தமிழக பாஜகவில் பதவிக்கான பிரச்சினைகள் பூதாகரமாகி, அது தொடர்பான வீடியோக்கள் கசிந்து பல அருவருக்கத்தக்க உரையாடல்கள் அம்பலமாகி இருக்கிறது. இதன் விளைவு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓர் அறிக்கையை வெளியிட்டு அதில், ‘கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்க வேண்டியதாயிற்று.

கூடவே, சமூக வலைதளங்களில் வெளியான தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலைச் சுட்டிக் காட்டி இந்தச் சம்பவத்தை விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும் அண்ணாமலையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் அடிநாதம் என்னவென்று விசாரித்தால், எல்லாம் பதவி பிரச்சினைதான் எனக் கூறுகிறார்கள். பகிரங்கமாக கொலை மிரட்டலும், காது கேட்க கூசும் ஆபாச வசைகளும் பாடும் சூர்யா சிவா, திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன். திமுகவில் உரிய அங்கீகாரம் இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டு பாஜகவுக்கு வந்தவர், அண்ணாமலையில் அபிமானத்தையும் வந்த வேகத்திலேயே பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் கட்சிக்குள்ளும் சரி, பொதுவெளியிலும் சரி தொடர்ச்சியாக தாறுமாறாக பேசி வந்திருக்கிறார் சூர்யா சிவா.

பூனைக்கு யார் மணி கட்டுவது என உட்கட்சியிலே புகைச்சல் இருந்த நிலையில் வான்டடாக வண்டியில் ஏறினார் என்று பகடி செய்வதுபோல் ஒரு தொலைபேசி உரையாடல் தனக்குத் தான் சேதம் விளைவித்துக் கொண்டு நிற்கிறார் என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பெண் நிர்வாகியை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாது, "நட்டாவிடம் சொல்லுவியா? அமித் ஷாவிடம் சொல்லுவியா, இல்லை மோடியிடம்தான் சொல்லுவியா? நானெல்லாம் ரவுடியிஸத்தில் திமுகவையே அலறவிட்டிருக்கிறேன்" என்று கொந்தளிக்க, இனியும் கருணை காட்ட முடியுமா என்ற நிலையில் உடனடி நடவடிக்கையை அவிழ்த்துவிட்டுள்ளார் அண்ணாமலை.

காயத்ரியின் காரசார ட்வீட்கள்: இந்நிலையில்தான் அதிகாலையிலேயே டெய்சி சரணுக்கு ஆதரவுக் குரலோடு ஒரு ட்வீட் பதிவிட்டார் காயத்ரி ரகுராமன். அதில், "பெண்களை குறிவைத்து தவறாகப் பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு" என்று பதிவிட்டிருந்தார். குறிப்பாக அவர் ட்வீட்டில் இடம்பெற்றிருந்த கழுதைப்புலி (ஹைனாக்கள்) என்ற வசவு ஓங்கி ஒலித்துவிட்டது. அதனாலோ என்னவோ மதியம் சூரியா சிவா மீதான தடை விவரம் வரும்போதே காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் முதலில் ட்விட்டரிலேயே எதிர்கொண்டுள்ளார் காயத்ரி. சரியாக ஒரு மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு வகையான உணர்வை அவர் கொட்டித் தீர்த்துள்ளார். தடை அறிவிப்பு வெளியானதுமே, "நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசத்தான் செய்வார்கள். அவர்களை யாரும் தடுக்க முடியாது. நான் இடைநீக்கத்திலும் தேசத்துக்காக வேலை செய்வேன்" என்று கூறியிருந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், "அவருக்கு முதல் நாளில் இருந்தே என்னை வெளியேற்றும் எண்ணம் இருந்தது. ஆனால் நான் இன்னும் உறுதியாக மீண்டு வருவேன்" என்று கூறிவிட்டு பத்தே நிமிட இடைவெளியில், "நான் கட்சிக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்கமாட்டேன். அப்படி சொல்பவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுப்பேன். கட்சி என்பது எந்த தனிநபராலும் ஆனது அல்ல. அதிகாரமிக்கவர்கள் இருந்தால் இப்படித்தான் முடிவுகள் விசாரணைகளே இன்றி அறிவிக்கப்படும்" என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்கள் மீம்ஸ்களாலும், ரீட்வீட்களாலும், பேஸ்புக் பின்னூட்டங்களாலும் நிரம்பி வழிகின்றன. ‘வரம்பு மீறிய பேச்சு எங்கிருந்து வருகிறது என்றால்...’ எனப் பதிவிட்ட நெட்டிசன் ஒருவர், பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை ‘குரங்கு போல்’ என்று விமர்சித்த வீடியோவை இணைத்திருக்கிறார். “4 எம்எல்ஏ.க்களை மொத்தமாக தமிழக சட்டப்பேரவைக்கு பாஜக இப்போதுதான் அனுப்பியுள்ள நிலையில், இத்தனை வம்பு தேவையா?”என்று கட்சிக்குள் சிலர் குமுறுகின்றனர்.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம், "நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கூறியுள்ளார். வாசிக்க > “என் தரப்பு விளக்கம் கேட்கப்படவில்லை” - பாஜக தலைமை மீது காயத்ரி ரகுராம் காட்டம்தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x