Published : 17 Dec 2016 08:32 AM
Last Updated : 17 Dec 2016 08:32 AM

காஞ்சி மாவட்டத்தில் 298 கிராம ஊராட்சிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் குடிநீர் விநியோகம்: சீரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 298 கிராம ஊராட்சிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதன்படி, 8330 மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. 130 மின்மாற்றிகள், 27 உயர் மின்னழுத்த கோபுரங்கள் சாய்ந் தன. இதனால் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மின்வாரிய ஊழியர்களின் முயற்சி யால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டாலும், இன்னும் 60 சதவீத கிராமங்களில் மின்சாரம் வழங்க முடியாத நிலை உள்ளது. மின்சாரம் விநியோகிக்கும் பணி சீரடையாததால் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றி அதனை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு கிராமங் களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட் டுள்ளது. சில இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத் திலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் புயல் பாதிப்பு பணிகளை பார்வையிடும் அமைச்சர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 298 கிரா மங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றும் மோட்டார்களை ஜெனரேட் டர் மூலம் இயக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜெனரேட்டர் எடுத்துச் சென்று மோட்டாரை இயக்க முடியாத சூழல் உள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் சீராகும் வரை லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் நேரில் ஆய்வு

இதனிடையே மாவட்டம் முழு வதும் அமைச்சர்கள் குழு புயல் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகிறது. இதன்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெரும்புதூர் ஊராட்சி ஒன்றி யம் போந்தூர் கிராமத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதை ஆய்வு செய்தார். பொன்னலூர் கிராமத்தில் 400 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் 11 கிலோ வாட் மின் கம்பி வழித்தடம் புதிதாக அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் - சென்னை சாலை யில் சந்தவேலூரில் மின்கம்பங்கள் வழித்தடம் சரி செய்யும் பணி களையும் ஆய்வு செய்தார். வாலாஜாபாத் திருப்புலிவனம் சாலையில் இளையனூர்வேலூரில் குண்டுமேடு வாய்க்கால் தரைப் பாலம், சாலை மழை காரணமாக பழுதடைந்ததை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிங்கப்பெருமாள்கோவில் - படப்பை சாலையில் 110 கிலோ வாட் மின்கோபுரம் சாய்ந்து விட்டது. அங்கு புதிதாக கான்கீரிட் போட்டு மின் இணைப்பு அமைக்கும் பகுதியையும் பார்வையிட்டார்.

இதேபோல் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்யூர் பகுதியில் ஏற் பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். இரும்புலிச்சேரி பாலம், இடையாத்தூர் பாலாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்படும் பாலங்களை பார்வையிட்டார். புதுப்பட்டினம், வெங்கச்சேரியில் உள்ள தரைப் பாலம் மழை காலங்களில் வெள்ளம் வருவதால் சிரமம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

2 ஆயிரம் வெளிமாநில மின் ஊழியர்கள்

புயல் பாதிப்பால் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தடைபட்ட மின்விநியோகத்தை சீரமைக்க உள்ளூர் பணியாளர்கள் 2337 பேரும், வெளி மாவட்ட பணியாளர்கள் 799 பேரும் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் மின் விநியோகம் சரி செய்யப்பட்டாலும் பல பகுதிகளில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.இதனைத் தொடர்ந்து வெளிமாட்டங்களில் இருந்து 700 பேரும், வெளி மாநிங்களில் 2 ஆயிரம் பேரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் பணியை தொடங்கியுள்ளனர்.

புயலின்போது வாலாஜாபாத் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையம் அருகே இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்தது. பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்ததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இந்த நீரேற்று நிலையத்திலிருந்து பெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை சீரமைக்கும் வகையில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்வழித்தடம் சரிசெய்யப்பட்டு வருகிறது. இப் பணிகளை வந்தவாசி கோட்ட மின்வாரியப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x