Last Updated : 07 Nov, 2016 04:47 PM

 

Published : 07 Nov 2016 04:47 PM
Last Updated : 07 Nov 2016 04:47 PM

ஹெல்மெட் அணியாத இளைஞர்களை போலீஸ் மடக்கியபோது விபத்து: சென்னை சம்பவம் உணர்த்துவது என்ன?

'தலைக்கவசம் உயிர்க்கவசம்'. இந்த விழிப்புணர்வு வாசகத்தின் மீது வாகன ஓட்டிகளின் புரிதலும் போக்குவரத்து போலீஸாரின் கெடுபிடியும் தமிழகத்தின் நீண்ட கால விவாதப் பொருள்.

இந்த விவாதத்துக்கு இன்னுமொரு கருவாக கிடைத்துள்ளது சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த சம்பவம் ஒன்று.

வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கமான பரபரப்பு. "சென்னை கலங்கரை விளக்கம்பகுதியில் போக்குவரத்து போலீஸார் கெடுபிடியால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளானர்கள்" இப்படித்தான் முதல் தகவல் வெளியானது.

சம்பவத்தை நேரில் பார்த்த புதுப்பேட்டையைச் சேர்ந்த அலாவுதீன் 'தி இந்து'விடம் கூறும்போது, "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலங்கரை விளக்கம்பகுதியில் ஹெல்மெட் அணியாத காரணத்துக்காக எனது இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டனர். அவசர வேலை இருந்ததால் நான் சென்றுவிட்டேன். மாலை, போலீஸாரிடம் எனது வாகனம் குறித்து கேட்டேன். ஆனால், திங்கள்கிழமை காலை வந்து ஆர்.ஐ-யை சந்திக்குமாறு சொல்லி அனுப்பிவிட்டனர். ஆர்.ஐ. பாண்டியனை சந்திப்பதற்காக காலை 8 மணியளவில் கலங்கரை விளக்கம்பகுதியில் ஆல் இந்தியா வானொலி நிலையம் அருகே நின்று கொண்டிருந்தேன்.

அப்போது பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. போலீஸார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த இடத்தின் அருகே அவர்கள் வாகனம் வந்தபோது போலீஸ்காரர் ஒருவர் காலை நீட்டி வாகனத்தை நிறுத்த முயன்றார். திடீரென வாகனத்தை மறித்ததால் அந்த இளைஞரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தை ஓட்டிய மோஹித் என்ற இளைஞருக்கு தலை, கை, கால்களில் அடிப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். மற்றொரு இளைஞர் புவனுக்கு கண், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. காலை நீட்டி வண்டியை நிறுத்த முயன்ற போலீஸ்காரருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்த வேண்டும் என முடிவு செய்த போலீஸார் தடுப்பு வேலியை வைத்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு தூரத்திலேயே வாகனத்தின் வேகத்தை அவர்கள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். அதைவிடுத்து மிக அருகில் வாகனம் வந்தபோது காலை நீட்டி வாகனத்தை மறித்ததால்தான் விபத்து நேர்ந்தது" என்றார்.

சம்பவ பகுதியில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் | படம்: எல்.சீனிவாசன்.

இந்தத் தகவலின் அடிப்படையில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங்கை தொடர்பு கொண்டு இரண்டு கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி 1: கலங்கரை விளக்கம் பகுதியில் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத இளைஞர்களை துரத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது?

கேள்வி 2: போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் இல்லாமல் பயணித்த புகைப்படம் இருக்கிறது.அவர்கள் மீது உங்கள் நடவடிக்கை என்ன?

"சம்பவம் குறித்து எனக்கு இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. அதனால் இப்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்" என்றார்.

ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அபய் குமார் சிங் கூறியதின் பேரில் பேசுவதாக 'தி இந்து' விடம் பேசிய சென்னை போக்குவரத்து இணை ஆணையர் கே.பவானீஸ்வரி, "கலங்கரை விளக்கம் பகுதியில் காலையில் நடந்த சம்பவத்தில் இளைஞர்களை போக்குவரத்து போலீஸார் துரத்தவில்லை. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது நீதிமன்ற உத்தரவு அதை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதே எங்கள் பணி. வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த இரண்டு இளைஞர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கிறார்கள். இதில் போக்குவரத்து போலீஸ் ஒருவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர்கள் இருவரும் மைலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உடல்நலம் சீராக இருக்கிறது.

அப்படியே போலீஸார் நிறுத்தியும் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை அடுத்த சிக்னலில் மடக்கிப் பிடிப்பதே வழக்கம். எனவே, ஹெல்மெட் அணியாததற்காக யாரையும் துரத்தும் அவசியம் இல்லை.

போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறுவதாகக் கூறியிருந்தீர்கள். பொதுமக்களுக்கு என்ன சட்டதிட்டமோ அதேதான் போக்குவரத்து போலீஸாருக்கும். விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காயமடைந்தவர்கள் விவரம்:

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் பின்வருமாறு. மோஹித்(19) த/பெ. ஹீராலால். புவன் குப்தா (18) த/பெ. உமேஷ் குப்தா. இருவரும் யானைகவுணி பகுதியைச் சேர்ந்தவர்கள். கல்லூரி மாணவர்கள். பெசன்ட் நகரிலிருந்து யானைக்கவுணி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே சம்பவம் நடந்துள்ளது.

காயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரர் சாம் வெஸ்லி தாஸ்(33). இவருக்கு வலது காலில் அடிபட்டுள்ளது. ராயப்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் நிலை என்ன?

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மோகித், புவன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில், "மாணவன் மோகித்துக்கு தலை, கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனுக்கு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இப்போது இருவருமே நலமாக இருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் இருவரையும் இன்னும் அவரது உறவினர்கள் நேரில் சென்று பார்க்கவில்லை. மோகித் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது சகோதரர் கூறினார்.

மருத்துவர்களிடம் விசாரித்தபோது, "அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். சிகிச்சை அளித்துள்ளோம். இப்போது பரவாயில்லை" என்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவும்.. தனிப்படையும்:

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக காவல் துறை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, போக்குவரத்து கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங் மேற்பார்வையில் வட சென்னை இணை ஆணையர் எம்.டி.கணேச மூர்த்தி, தென் சென்னை இணை ஆணையர் கே.பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனடிப்படையில், சென்னையில் நாள்தோறும் ஆங்காங்கே ஹெல்மெட் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

அரசு என்பது மக்களால் ஆனதே. சட்டம் ஒன்று அமலுக்கு வரும்போது அதை முழுமையாக நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் 67 ஆயிரத்து 250 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 15 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த 69 ஆயிரத்து 59 சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 642 பேர் பலியானார்கள். இந்த ஆண்டும் அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 54 ஆயிரத்து 676 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம். அதிகரித்துவரும் சாலை விபத்துகள் குறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, "போக்குவரத்து விதிமீறல்களை மீறக்கூடாது, என்ற பொறுப்பு பொதுமக்களிடம் வர வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குறுகிய சாலைகளில் அதிக வேகமாக செல்லக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டிச் செல்லக்கூடாது" என்றனர்.

இந்த பொறுப்பு நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து நேர்ந்தால் பெரியளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தன்னுயிரைக் காக்க தானே தயாராக இல்லாதபோது அரசு என்ன செய்ய முடியும். ஒவ்வொரு தனிநபரின் பின்னாலும் சென்று கண்காணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது. எனவே, குறைந்தபட்ச பொறுப்புணர்வோடு மக்கள் நடந்துகொள்வது அவசியமானது.

போக்குவரத்து போலீஸார் கவனிக்க வேண்டியது என்ன?

மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததே போக்குவரத்து போலீஸாரின் அணுகுமுறையும். மக்கள் ஹெல்மெட் அணிய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமீறல்கள் நடைபெறும்போது கண்டிப்பாக நடவடிக்கை அவசியம். ஆனால், நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி கடுமை காட்டுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். ஹெல்மெட் அணியாதவர்களை வாகனத்திலிருந்து இறக்கி சில இடங்களில் கைபலத்தை பயன்படுத்தி அடிப்பது போன்ற நிகழ்வுகள் எப்படி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த உதவும்? "மணிக்கணக்கில் நிற்கவைப்பது, நாள் கணக்கில் இழுத்தடிப்பது, ஹெல்மெட் வாங்கியதற்கு பில் கொண்டுவா என்று சொல்லி அதுவரை அசல் ஆவணங்களை வாங்கி வைத்துக்கொள்வது" எல்லாம் மக்களை அதிருப்தி அடையச் செய்கிறது என்கிறார் இணையவாசி ஒருவர்

'டார்கெட்' உண்மையா?

அண்மையில் போக்குவரத்து போலீஸில் ஹெல்மெட் அணியாததற்காக நண்பர் ஒருவர் சிக்கியிருக்கிறார். அவருடைய அசல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்ட போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் வாங்கிய பில் கொடுத்துவிட்டு ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கின்றனர். நண்பரோ, "ஸ்பாட் ஃபைன் சொல்லுங்கள் கட்டிவிடுகிறேன். ஹெல்மெட் உடனடியாக வாங்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். அதற்கு போலீஸாரோ, "நீங்கள் நேர்மையாக பேசுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 40 கேஸ் பிடிக்கும் டார்கெட் இருக்கிறது. பிடிபடுபவர்களில் பலரும் யாராவது பெரிய இடத்து நபரின் பெயரைச் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். நீங்கள் நேர்மையாக இருப்பதால் ஆவணங்களை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" என சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். நண்பர் இப்போது ஹெல்மெட் ரசீதுடன் ஆவணத்தை மீட்கும் பணியில் இருக்கிறார்.

அபராதம் வசூலிப்பு எப்படி?

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டியை போக்கு வரத்து போலீஸார் வழி மறித்து அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்ததற்கான ரசீதை கொடுக்கின் றனர். பின்னர் வாகன ஓட்டியின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுநர் உரிமத்தை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் பெற்றுக்கொள்கிறார். அபராத தொகையை நடமாடும் நீதிமன்றத்தில் கட்டி அதற்கான ரசீதையும், ஹெல்மெட் வாங்கியதற் கான ரசீதையும் காட்டினால் போலீஸார் பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப கொடுத்துவிடுவார்கள்.

சென்னையில் 135 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் 2 நடமாடும் நீதிமன்ற வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதனால், தண்டனைக்கு உள்ளாகும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரூ.100 அபராதம் கட்ட வாரக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக அபராதம் செலுத்தும் (ஸ்பாட் ஃபைன்) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இத்தனை காலம் மெத்தனமாக இருந்துவிட்டு உயர் நீதிமன்ற உத்தரவு வந்ததையடுத்து விழித்துக் கொண்ட போலீஸார் கெடுபிடி காட்டட்டும். ஆனால், அதற்காக இப்படி இலக்கு வைத்து ஆட்களை பிடித்தால் சட்டத்தின் நோக்கம் நிறைவேறுமா என்பதை போலீஸார் உற்று கவனித்து திட்டங்களை வகுத்தால் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x