Published : 20 Nov 2016 02:59 PM
Last Updated : 20 Nov 2016 02:59 PM

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காதது ஏன்?- ஸ்டாலின்

தமிழக விவசாயிகளின் இழப்புகளுக்கும், தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்காமல் இருப்பதற்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவது பற்றி உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?

ரூபாய் நோட்டுகள் இல்லாமல் தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தலைவர் கருணாநிதி அறிவித்து இருக்கிறார்.

நானும் திமுக இளைஞரணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். அதில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் 24-ம் தேதி, மாலை 4 மணி முதல் 5மணி வரை நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் திமுக இளைஞரணியினர் பெருந்திரளாக பங்கேற்று, அந்த போராட்ட வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன்.

அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.

நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.,க்கள் ஜல்லிக்கட்டு விவகாரம், 500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம், காவிரி விவகாரம் ஆகிய 3 பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். திமுக சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?

திமுகவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஏற்கெனவே திமுக குரல் கொடுத்து வருகிறது. மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும்.

தமிழக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?

தமிழக முதல்வரை ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றி விட்டதாக செய்தி வந்துள்ளது. அதனால் முதல்வரை பத்திரிகையாளர்கள் முடிந்தால் சென்று சந்தித்து இதுபற்றி கேளுங்கள். அப்படி இல்லை எனில் முதல்வரின் இலாகாக்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமோ அல்லது தமிழக விவசாயத்துறை அமைச்சரையோ கேட்டு செய்தி வெளியிட வேண்டும். அப்படியாவது விவசாயிகளுக்கு பயன் கிடைக்கட்டும்.

தமிழக விவசாயிகளின் இழப்புகளுக்கும், தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்காமல் இருப்பதற்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

ஓ.பன்னீர் செல்வத்திடம் முதல்வரின் பொறுப்புகள் வந்த பிறகு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

முதல்வர் ஜெயலலிதாவிடம் அந்த பொறுப்புகள் இருந்தபோதே தமிழக அரசு செயல்படவில்லை. இப்போது அந்த பொறுப்புகள் ஓ.பி.எஸ்ஸிடம் வந்த பிறகும் செயல்படவில்லை. அதனால் தான் அரசு முடங்கி போயுள்ளது என தொடர்ந்து சொல்லி வருகிறோம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x