Last Updated : 03 Nov, 2016 12:08 PM

 

Published : 03 Nov 2016 12:08 PM
Last Updated : 03 Nov 2016 12:08 PM

திடீர் மீன்பிடி தடைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமா? அதிகாரிகள் சதியா?- நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேதனை

ஜனவரி 1-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் வரை, 4 மாதங்களுக்கு மீன்பிடிக்க விதிக்கப்பட்ட திடீர் தடை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலை - நொச்சிக்குப்பம் மீனவர்கள் நவ.4-ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் தொடங்கி, கோவளம் வரை உள்ள மீனவக் கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றி பட்டினிப் போராட்டம் நடத்தி, தமிழக அரசின் மீன்பிடித் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

தமிழக அரசு விதித்த தடை உத்தரவு என்ன?

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், "வருகிற ஜனவரி 1 தேதி முதல், ஏப்ரல் மாதம் வரை, சென்னை நேப்பியர் பலம் முதல் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரையிலும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையிலும் கடலிலே மீன் பிடிக்கும் மீனவர்கள், விசைப்படகையோ, இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகையோ பயன்படுத்தி 5 கடல் மைல்கள் வரை மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் மீனவர்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மயிலை - நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

வழக்கு பின்னணி:

ஆமைகள் முட்டையிடும் காலம் என்பதாலேயே இந்த தடையை அரசு விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படக் காரணம் சுப்ரஜா என்பவர் நடத்தும் ட்ரீ பவுண்டஷன் அமைப்பின் முயற்சியில் தொடரப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாமாகவே முன்வந்து ஒரு வழக்கறிஞரை நியமித்து, அரசிடம் ஆமைகளைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என வினவ தமிழக அரசு ஆமைகளைப் பாதுகாக்க 4 மாதங்களுக்கு மீன் பிடிக்க தடை விதித்துள்ளது.

மீனவர்கள் எதிர்ப்பு ஏன்?

ஆமைகளைப் பாதுகாப்பதற்காக சென்னை கடலோரப் பகுதிகளில் 4 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அரசு மேற்கோள் காட்டியிருப்பது ஒடிசா அரசு தங்களது கடலோரத்தில் ஆமைகளைப் பாதுகாக்க மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது என்பதையே.

இது தொடர்பாக மயிலை - நொச்சிக்குப்பம் மீனவர் கிராம சபை துணைத் தலைவர் கு.பாரதி கூறும்போது, "ஆமைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் 4 மாதங்களுக்கு விசைப் படகுகளையும், கண்ணாடி இழைப் படகுகளான பைபர் படகுகளையும் தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆமைகளுக்கு முட்டையிடும் காலம் என்பதிலோ, இனப் பெருக்க காலம் என்பதிலோ, அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதிலோ, ஆமைகள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவக் கூடியவை எனபதிலோ, மீனவர்களுக்கு மாற்றுக கருத்து இல்லை. ஆகவே ஆமைகளைப் பாதுகாப்பதில் மீனவர்களும் அக்கறையோடு இருக்கிறார்கள். ஆனால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் கட்டுமரங்களுக்குப் பதில் கண்ணாடி இழைப் படகுகளைத்தான் பெரும்பாலான மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். இத்தகைய நிலையில் இந்தத் தடை உத்தரவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கும்.

ஒடிசா கடற்கரை வேறு, சென்னை கடற்கரை வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அலையாத்திக் காடுகள் அதிகம். எனவே அங்கு ஆமைகளின் நடமாட்டம் மிக அதிகம். இங்கே சென்னை கடற்கரைக்கு வந்து பாருங்கள், ஆமைகள் அதிகமாக இயல்பிலேயே இல்லை. ஒடிசா அரசாங்கம் தங்களது கடலோரத்தில் ஆமைகளைப் பாதுகாக்க மீன்பிடித் தடையை அறிவித்துள்ளது

நாங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடிகள். அன்றாடம் கடலுக்குச் சென்று இயற்கையை எதிர்த்துப் போராடி, இயற்கையுடனேயே உறவாடி, மீன்களை வேட்டையாடி, மக்களுக்கு உணவு தருகின்ற கடல்சார்ந்த உலகைச் சேர்ந்தவர்கள். ஆகவே ஆமைகளைப் பாதுகாக்கும் மனோபாவம் இயற்கையாகவே எங்களுக்கு நிலம் சார்ந்த மக்களை விட அதிகமாகவே உண்டு. ஆனால் ஆமைகளைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு முடிவு யாருடைய பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது என்று வினவினால், சிஎம்எப்ஆர்ஐ என்ற 'கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்' அளித்த பரிந்துரை எனக் கூறப்படுகிறது. எங்கள் வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடிய ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் மீனவ சங்க பிரதிநிதிகள் யாரது கருத்தும் கேட்கப்படவில்லை.

ஆமைகளைப் பாதுகாக்கும் ஆர்வத்தை நடைமுறைப்படுத்தும் முன்னர், கடலிலே சென்னைக்கு கடற்கரையோரம் எப்படிச் சூழல் இருக்கிறது என்று ஆராய்ந்து, கடல் சார் பழங்குடி மீனவர்களிடம் கருத்து கேட்டு, பிறகு முடிவுகளை எடுப்பதுதான் சரியானது?" மாறாக யாரோ ஒடிசா மாநிலத்தில் போட்டுள்ள ஒரு தடையை எடுத்துக் கொண்டுவந்து, இங்கே அதை அப்படியே இயந்திர ரீதியாகப் பொருத்த முயல்கிறார்கள். சென்னையைச் சுற்றி வாழும் மீனவர்கள் இன்னமும் பாரம்பரிய முறைப்படிதான் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பயன்படுத்தும் உச்சபட்ச நவீனமே 10 ஹெச்.பி இன்ஜின் மட்டுமே. இப்படி இருக்க கடலோரா மீன்வள ஆராய்ச்சிக் குழு கூறியதாக எங்கள் வாழ்வாதாரத்தை அரசு முடக்குவது ஏற்புடையது அல்ல.

இதே, கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எப்.ஆர்.ஐ) தமிழக அரசு கொண்டுவந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்தபோது, அரசும் அதிகாரிகளும் செவி மடுத்தார்களா? கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்தால் உப்புத் தண்ணீரை, நல்ல தண்ணீராக்க, உப்புக்கழிவுகளை அடர்த்தியாக மீண்டும் கடலுக்குள் கொட்டுவது கடல் வாழ் உயிரினங்களின் அழிவை ஏற்படுத்துகிறது.

சராசரியாக ஓர் ஆமை 45 நிமிடங்களுக்கு ஒரு முறைதான் மேலே வரும். ஆனால், கடலுக்கு அடியே தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கடலிலே சேர்ந்ததால்தான், ஆமைகள் அவ்வப்போது மேலே வந்து மூச்சு விட்டுச் செல்கின்றன. கடலுக்கு கீழே வாழ முடியாமல், மேலே மிதக்கத் தொடங்கி விட்டன. இதையெல்லாம் ஏன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்சியாளர்கள் என யாருமே கண்டு கொள்வதில்லை.

சென்னையில் நாளொன்றுக்கு விசைப்படகுகளை பயன்படுத்தி 130 டன் அளவிலும், பைபர் படகுகளைப் பயன்படுத்தி 60 டன் மீன் பிடிக்கப்படுகிறது. சென்னை நகரவாசிகளின் மீன் உணவுத் தேவையை நேரடியாக நிறைவு செய்கிறோம். சுவையான, அண்மையில் பிடிக்கப்பட்ட புதிய மீன்களை உண்ண வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறோம். இந்த நிலையில், 4 மாத கால தடை என்பது எங்கள் வாழ்வாதாரத்தை முடக்குவதோடு மக்களின் உணவுத் தேவையையும் பாதிக்கும்.

இதனை அரசு கவனத்துக்கு கொண்டுவரவே நாளை (நவம்பர் 4) 25 கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்" என்றார்.

அதிகாரிகள் சதியா?

விசைப்படகுகள் உள்ள 'பிராப்பளர்களில்' அடிபட்டு ஆமைகள் இறந்து விடுவதாகவும், அதற்காக விசைப்படகுகளில் உள்ள பிராப்பளர்களில் பாதுகாப்பு கவசங்கள் இருக்க வேண்டும் என்றும் தான் தாங்கள் கேட்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசு ஏன் இதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக மீன்பிடித் தடை போடுகிறது? அந்த தடைகாலத்தில் தாங்கள் ஏற்கெனவே மாநகராட்சி மூலம், சட்ட விரோதமாக கொண்டுவர விரும்பும், பிற மாநில மீன்களின் விற்பனைக்கு கூடங்களை அடையாறு ஆற்றுப்பகுதியில் நிறுவ மாநகராட்சி அதிகாரில் சிலர் மேற்கொள்ளும் மறைமுகத் திட்டமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் மீனவ சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

பாரபட்சமான தடை:

மேலும், நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வரையும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையும் மீனவர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே தடை அறிவித்த தமிழக அரசு, ஏன் செம்மஞ்சேரி முதல் கடப்பாக்கம் வரை எந்த தடையும் யாருக்கும் விதிக்கவில்லை. இது குறித்து மீனவர்கள் தரப்பில், "இந்த பாரபட்சமான தடைக்குக் காரணம் அந்தப் பகுதிகளில் மீனவள குப்பங்கள் இல்லை, மாறாக பெரும் பணக்காரர்களுடைய வீடுகள், பொழுதுபோக்கு நிறுவனங்களும் உள்ளன. அவற்றில் அரசு அதிகாரிகள் உள்ளே நுழைந்து தடங்கல் செய்ய விரும்பவிலை. எல்லாம் ஊழல் செய்யும் மாயம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

'அமைச்சரிடம் முறையிடுவோம்'

வருகிற நவம்பர் 7 ம் தேதி உயர் நீதிமனறத்தில் வர இருக்கின்ற இந்த வழக்கின் அடுத்த விசாரணையில் தமிழக அரசு, தடையை நீக்கிக் கொள்ளாவிட்டால் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் நடைபெற்றுவரும் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கடல் வாழ் உயிரினங்களைப் பற்றி, நிலத்திலே வாழும் மனிதர்களுக்கு நேரடி அனுபவமும் கிடையாது. மலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிக் கூட சமவெளியில் வாழும் மனிதர்களுக்கு போதுமான புரிதல் இருப்பதில்லை. இது இயல்பானதே. அப்படி இருக்கையில், அரசாங்கமோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ஊடகத்தாரோ கடல் சார்ந்த உலகம் பற்றி, யாராவது ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையே கேட்கின்றனர். அதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, அல்லது எழுதப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே தங்களுக்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டு முடிவுகளை செய்கின்றனர்.

எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், கடலைப் பற்றியும், கடலிலே வாழும் உயிரினங்களைப் பற்றியும், கடலிலே நிலவும் நீரோட்டங்களைப் பற்றியும், வருகின்ற புயல், காற்று, மின்னல், மழை ஆகியவற்றைப் பற்றியும், நேரடியாகவும், அனுபவித்த காரணத்தினாலும், மீனவர்களுக்கு அதிகமாகத் தெரியும் எனபதை பலரும் ஏற்றுக் கொள்வதேயில்லை என்பதே மீனவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆமைகளைப் பாதுகாப்பதற்காக மீனவர்கள் வாழ்வாதாரத்தை முடக்கும் முயற்சிக்குப் பின்னணியில் இருப்பது அதிகாரிகள் சதியா இல்லை நிலம் சார்ந்த உலகம், கடல் சார்ந்த உலகத்தின் மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பா என்ற குழப்பத்தில் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x