Published : 07 Nov 2016 08:09 PM
Last Updated : 07 Nov 2016 08:09 PM

மருத்துவ மாணவர்களுக்கு தேசிய உரிமத் தேர்வு நடத்துவதை கைவிடுக: வாசன்

மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவத்தை முடித்தவுடன் தேசிய உரிமத் தேர்வு (என்எல்டி) நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குப் பிறகு மருத்துவர்களுக்கு தேசிய உரிமத் தேர்வை (National Licentiate Test) கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் மருத்து மாணவர்கள் பயில்கின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் மருத்துவர்களாக தகுதி பெறுகின்றனர். இதன்பின்னர், பயிற்சி மருத்துவத்தை முடித்து, முறையாக பதிவுசெய்துகொண்டு மருத்துவ சேவையாற்றுகின்றனர். இந்நிலையில், பயிற்சி மருத்துவத்தை முடித்த உடன் உரிமத் தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளித்திட மத்திய அரசின் 'நீட்' சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அரசியல் சட்டத்திற்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான 'நீட்' சட்டத்தில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெற்றிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை உத்தரவாதம் செய்திட அகில இந்திய தொகுப்பில் இருந்து வெளிவர தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழக மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x