Published : 18 Nov 2016 12:18 PM
Last Updated : 18 Nov 2016 12:18 PM

கூட்டுறவு வங்கிகளில் பணப் பரிவர்த்தனைக்கு உத்தரவிடுக: வைகோ

மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கறுப்புப் பணத்தை ஒழித்திடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 ஆம் தேதியன்று புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பினை வரவேற்று மதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்டேன்.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்வதில் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள 4474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவை அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

எந்தத் தேசிய வங்கிகளிலும் சேமிப்புக் கணக்கு வைத்து இருக்காத லட்சக்கணக்கான மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் அதன் தாய் வங்கியுமான மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை எடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இக்கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் குடிமைப் பொருள் விநியோகக் கடைகளின் அன்றாடப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மகசூலுக்கு இடவேண்டிய ரசாயன உரங்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். தேவையான விதைகளைப் பணம் செலுத்திப் பெற முடியவில்லை.

தவணை தவறாமல் பயிர்க் கடனைச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி கிடையாது. ஆனால், ஒரு நாள் தவறினாலும் வட்டி செலுத்த வேண்டும். வட்டி செலுத்தும் கால அளவு கடந்தால், அபராத வட்டி செலுத்த வேண்டும்.

நவம்பர் 9 ஆம் தேதியில் இருந்து விவசாயிகள் தங்களிடம் இருந்த பணத்தைச் செலுத்தி கடனை அடைக்க முடியாமலும், வருங்காலத்தில் வட்டி, அபராத வட்டி செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பயிர்க்கடன் செலுத்தும் விவசாயிகள், கறவை மாடு கடன் செலுத்துவோர், நீண்ட, குறுகிய கால பயிர்க்கடன் பெறுவோர், சிறு வணிகர், மகளிர் குழு கடன் பெறுவோர், வங்கியில் சேமிப்பு வைத்திருந்து பணத்தை எடுக்க விரும்புவோர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உன்னதக் குறிக்கோளோடு தொடங்கப்பட்டு, தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் 813 கிளை கூட்டுறவு வங்கிகள், இவற்றின் மேற்பார்வையில் செய்யப்படும் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களின் வைப்புத் தொகை சுமார் 55 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாக இக்கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தடை உத்தரவால், கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்தவோ, சேமிப்புப் பணத்தை எடுக்கவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வித பரிவர்த்தனைகளும் மேற்கொள்ள முடியவில்லை.

இந்தக் கூட்டுறவு வங்கிகள் / கடன் சங்கங்களை மாத்திரமே நம்பி இதுநாள் வரை பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஆங்காங்கே தொடக்கக் கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனவே, மத்திய அரசு அவசர நிகழ்வாகக் கருதி உடனடியாகத் தலையிட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கிராமப்புறச் சேவையை மையமாகக் கொண்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x