Published : 16 Nov 2022 04:55 AM
Last Updated : 16 Nov 2022 04:55 AM

மாணவியின் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் - தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கல்லூரி மாணவி பிரியாவின் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி: தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரியா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தவறான சிகிச்சையினால் பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார் என்பதையறிந்து மனவேதனை அடைந்தேன். அவரின் குடும்பத்துக்கான இழப்பீட்டை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை: திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவத் துறையும் சேர்ந்திருப்பது வேதனை. உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: அரசு மருத்துவமனையில் பிரியா, அடுத்தடுத்து ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் பிரியாமரணம் அடைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வரும் காலங்களில் அரசு மருத்துவர்கள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: மிகப்பெரிய வீராங்கனையை தமிழகம் இழந்து விட்டது. அரசாங்கம் அவரது குடும்பத்துக்கு ஒத்துழைப்பு, உதவிகளை வழங்க வேண்டும். இந்த நிகழ்வை அரசியல் ஆக்கக் கூடாது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தவறான சிகிச்சையே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவருகிறது. அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்துவதோடு அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

ம.நீ.ம. மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ: கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்கள், உயிர்களுடன் விளையாடும் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாரிவேந்தர் எம்பி., சமக தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா ஆகியோரும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x