Published : 15 Nov 2022 07:35 PM
Last Updated : 15 Nov 2022 07:35 PM

தி.மலை மகா தீப தரிசனத்தைக் காண 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்க முடிவு

திருவண்ணாமலை | கோப்புப் படம்

திருவண்ணாமலை: மகா தீப தரிசனத்தைக் காண அண்ணாமலை மீது ஏறும் 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற உள்ளன. தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, பக்தர்களின் வருகை, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து முடிவெடுத்துள்ளனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெறும் நாளான டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின்போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. நகரை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 1,160 பேருந்துகளை நிறுத்தலாம். மேலும் 12,400 கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் 59 கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது.

கூடுதலாக 14 ரயில்கள்: 2,692 சிறப்பு பேருந்துகள் மூலம் 6,431 நடைகள் இயக்கப்படும். தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதை இடையே 100 பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலைக்கு தற்போது 9 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 14 ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 நிலையான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. 15 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ், 10 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்கப்பட உள்ளன.

12,097 போலீஸ் பாதுகாப்பு: ஐஜி தலைமையில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் உட்பட 12,097 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 26 தீயணைப்பு வாகனங்களுடன 600 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையில் பாதிக்கப்பட கூடிய பகுதியான 23 இடங்களில், 150 வனத்துறை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அண்ணாமலையார் கோயிலில் 169 கண்காணிப்பு கேமரா மற்றும் கிரிவல பாதையில் 97 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். 57 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 35 இடங்களில் மே ஐ ஹெல்ப் யூ பூத் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகளின் கைகளில் அடையாளத்துடன் கூடிய ரிஸ்ட் பேன்ட் கட்டப்படும். 158 இடங்களில் குடிநீர் வசதி மற்றும் 85 இடங்களில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட உள்ளன. குப்பைகளை அகற்ற 2,925 தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

101 இடங்களில் அன்னதானம்: 101 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட உள்ளன. 14 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உணவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. கிரிவலத்தில் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் 4 தங்க நாணயங்கள், 72 வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 9 சிறப்பு மையங்கள் மூலம் துணிப்பை வழங்கப்படும். டிசம்பர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாடு மற்றும் குதிரை சந்தை நடைபெற உள்ளன. தீபத் திருவிழா நடைபெறும் நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று, அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x