Published : 16 Jul 2014 09:00 am

Updated : 16 Jul 2014 10:00 am

 

Published : 16 Jul 2014 09:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM

கும்பகோணம் கொலைத்தீ நினைவுபடுத்துவது என்ன?

2004, ஜூலை 16, காலை 10 மணி. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெரு. ஸ்ரீகிருஷ்ணா பள்ளி வழக்கத்துக்கு மாறான பரபரப்புடன் காணப்படுகிறது. அன்றைக்கு அங்கே உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வரப்போகிறார் என்பதுதான் பரபரப்புக்குக் காரணம்.

பணம் எனும் வெறிப்பிண்டம்


ஸ்ரீகிருஷ்ணா பள்ளி - அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுவந்த தனியார் பள்ளி. இரண்டு மாடிக் கட்டிடம். தரைத்தளத்தில் சரஸ்வதி வித்யாலயா என்ற பெயரில் ஆங்கிலப் பள்ளியையும் மாடியில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியையும் நடத்திவந்தார்கள். அதிகாரியின் ஆய்வுக்குப் பள்ளி நிர்வாகம் கொடுத்த முக்கியத்துவத்துக்கு நோக்கம் உண்டு. ஸ்ரீகிருஷ்ணா பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையைக் கூடுதலாகக் கணக்குக் காட்டி, கூடுதலாகச் சத்துணவுப் பொருட்கள் ஒதுக்கீட்டைப் பெறும் திட்டம் பள்ளி நிர்வாகத்திடம் இருந்தது என்று தகவல். இதற்காக, கடந்த சில நாட்களாகவே கீழே தரைத்தளத்தில் இயங்கிய சரஸ்வதி வித்யாலயா ஆங்கிலப் பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு ஷூ, சாக்ஸையெல்லாம் கழற்றிவிட்டு மேலே வரச் சொல்லி, அவர்களுடைய பெயர்களையெல்லாம் மாற்றி உட்காரச் சொல்லியிருந்தது பள்ளி நிர்வாகம்.

கொடுமையான ஆடி வெள்ளி

ஜூலை 13 அன்றே ஆய்வு நடக்கும் என்று தகவல். நடக்கவில்லை. 14, 15 என்று தேதிகள் தள்ளிப்போயின. 16-ம் தேதியும் அதிகாரிக்காகக் காத்திருக்கின்றனர்.

அன்றைக்கு ஆடி வெள்ளி. ஆய்வு நடப்பதற்குள் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு ஒரு எட்டு போய் வந்துவிட நினைக்கின்றனர் ஆசிரியைகள். அப்படிச் செல்லும்போது, மேலே உள்ள குழந்தைகள் யாரும் பழைய ஞாபகத்தில் கீழே இறங்கிவிடக் கூடாது என்று கிரில் கதவை மூடி, பூட்டிவிட்டுச் செல்கின்றனர்.

கடைசி டாட்டா

காலை 9.30 மணி, முதல் தளத்தில் இயங்கிவந்த ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9-வது படிக்கும் சூர்யா வகுப்பறை வாசலில் நின்றுகொண்டிருக்கிறாள். “அக்கா” என்ற குரல் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறாள். தரைத்தளத்தில் இயங்கிக்கொண்டிருந்த சரஸ்வதி வித்யாலயா என்ற ஆங்கிலப் பள்ளியில் மூன்றாவது படிக்கும் பக்கத்து வீட்டுச் சிறுவன் பிரவின்ராஜ் சிரித்துக்கொண்டே அவளுக்கு டாட்டா காட்டியபடி இரண்டாவது தளத்துக்குப் படியேறிச் செல்கிறான். பதிலுக்கு, சூர்யாவும் டாட்டா காட்டுகிறாள். அப்போது தெரியாது இருவருக்கும் அதுதான் கடைசி டாட்டா என்று.

குழந்தைகளைத் தின்ற ஊழல் தீ

பள்ளியின் பின்பக்கத்தில், கூரை வேய்ந்த சமையல்கூடத்தில், சத்துணவு அமைப்பாளர்கள் விறகு அடுப்பில் சாப்பாடு செய்ய ஆரம்பிக்கின்றனர். திடீரென அப்போது நெருப்புப் பொறியொன்று கீற்றுக்கொட்டகையில் பற்றுகிறது. அவ்வளவுதான். மளமளவென்று பரவுகிறது தீ.

கொஞ்ச நேரத்தில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தைகளின் ஓலம் கேட்கிறது. கீழிருந்து இதைப் பார்க்கும் குழந்தை சூர்யா ஆசிரியைகளிடம் இதைச் சொல்ல ஓடுகிறாள். ஆனால், எங்கும் ஆசிரியைகள் இல்லை. இதற்கிடையே கூண்டில் அடைபட்ட பறவைகள்போல மேல் மாடியில் சிக்கிய குழந்தைகள் கதறுகின்றன. கீழிருந்த குழந்தைகளுக்கும் பெறும் அச்சம். வெளியேற முற்பட்ட குழந்தைகளும் குறுகலான படிக்கட்டுகளில் நெருக்கடியில் சிக்கிக்கொண்டு விழுகின்றன. அதற்குள் தீ மேலும் பரவுகிறது.

எல்லாம் முடிந்தது

தீயையும் குழந்தைகளின் அலறலையும் பார்த்துப் பதறிப்போய்க் கட்டிடத்தின் கதவுகளையும் கிராதிகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே போன அக்கம்பக்கத்தினர் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னரே 70 குழந்தைகள் கருகிப்போய்விட்டிருந்தனர். 30 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 18 குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்தனர். மொத்த சாவு எண்ணிக்கை 94.

உலகமே உறைந்தது. இவ்வளவு மோசமாகவா இந்தியா தன் பள்ளிக்கூடங்களை நடத்துகிறது என்று எல்லா நாடுகளும் அதிர்ந்தன. அரசியல் வழக்கம்போல ஏகமாக நாடகக் காட்சிகளை நடத்தியது. நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் வந்தனர். பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு போடப்பட்டு நீதிமன்ற விசாரணை நடந்தது. இன்றோடு சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகை உலுக்கிய இந்த வழக்கு வழக்கம்போல இன்னும் முடிந்தபாடில்லை.

குழந்தைகளின் பெற்றோர் மட்டும் வழக்கம்போல, இன்றைக்கும் அந்த நினைவுச்சின்னத்தின் முன் கூடுகிறார்கள். கதறி அழுகிறார்கள். அந்த நினைவுச்சின்னம் 94 குழந்தைகளின் உயிர்களை மட்டும் அவர்களுக்கு நினைவுபடுத்துவதில்லை; கல்வித் துறையில் சில அதிகாரிகளிடத்தில் நிலவும் ஊழலை, சில ஆசிரியர்களிடத்தில் நிலவும் பொறுப்பற்றதனத்தை, தனியார் கல்விக்கூடங்களின் பணவெறியை, மக்களின் ஞாபக மறதியை எல்லாவற்றையும்தான் ஞாபகப்படுத்துகிறது. குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் இன்னமும் அழுதுகொண்டிருக்கிறார்கள்... ஊழலோ இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறது!

- சி. கதிரவன், தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in


2004ஜூலை 16தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் காசிராமன் தெருஸ்ரீகிருஷ்ணா பள்ளிஊழல் தீ

You May Like

More From This Category

More From this Author