Published : 13 Nov 2022 05:15 PM
Last Updated : 13 Nov 2022 05:15 PM

திமுக அரசு மேற்கொண்ட பணிகளால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை: அமைச்சர் ஏ.வ.வேலு

மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

சென்னை: திமுக அரசு மேற்கொண்ட பணிகளால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து இன்று (நவ.13) ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி, சைதாப்பேட்டையில் ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுத்தாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதையும், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பின்றி மழைநீர் வேகமாக ஓடுகிறதா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு, "6 லட்சம் கோடி ரூபாய், அரசாங்கத்திற்கு கடன் சுமையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் முன்பு இருந்த ஆட்சியாளர்கள். அந்த ஆட்சியின் தொய்வை நிறைவு செய்வதற்காக அமைச்சர்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். சென்னையைப் பொருத்தவரை சாலை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. மழைநீர் வடிகால்கள் மூலமாக உடனுக்குடன் வடிந்து விடுகிறது.

சென்னை சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலை பகுதியில், தேங்கும் மழை நீரை அகற்றும் பொருட்டு, அண்ணா சாலையின் குறுக்கே டாக்டர் கருணாநிதி பொன்விழா வளைவு அருகில், முன்வார்ப்பு கால்வாய் மற்றும் வடிகால் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், ரூ.1.05 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பருவ மழைக் காலம் முடிந்தபின் இப்பணி உடனே துவக்கப்படும். உள்வட்டச் சாலையில், ஈக்காட்டுத்தாங்கலில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தின்கீழ் 435 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால், ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் உள்ள மழைநீர் ஒரு பகுதி அடையாறுக்கும், மற்றொரு பகுதி சிட்கோ கால்வாய்க்கும் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில், மழைநீர் தேங்க வாய்ப்பில்லை. சதுப்பு நிலப்பகுதிகளில் குப்பைகளையும், கழிவு பொருட்களையும் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x