Published : 12 Nov 2022 05:36 PM
Last Updated : 12 Nov 2022 05:36 PM

வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் விடுதலை

வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த நளினியை கைப்பிடித்து அழைத்து வந்த அவரது சகோதரர் பாக்கியநாதன். | படம்: வி.எம்‌.மணிநாதன்

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினி மற்றும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். பரோலில் இருந்து நளினியை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, அவரை விடுதலை செய்தனர். இதேபோல் முருகன், சாந்தன் ஆகியோரும் நடைமுறைகள் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன்

முன்னதாக, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் சற்றும் சாந்தனை வழக்கறிஞர் ராஜகுரு நேற்று சந்தித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘முருகன் விடுதலையானதும் காட்பாடியில் சில நாட்கள் தங்கியிருந்து லண்டன் செல்வது குறித்து ஆலோசிக்கவுள்ளனர். சாந்தன் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு இலங்கை செல்ல தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்” என்றார்.

நளினி - முருகன்

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது.

மேலும், ‘‘பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு இந்த 6 பேருக்கும் பொருந்தும். சிறையில் 6 பேரின் நன்னடத்தை, அங்கு பயின்ற கல்வி, பரோல் விதிமுறைகள், மருத்துவ ஆவணங்கள், ஆளுநர் ஏற்படுத்திய தாமதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் உள்ளார். சென்னை புழல் சிறையில் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் உள்ளனர். அவர்களும் நடைமுறைகளுக்குப் பிறகு விடுவிக்கப்படவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x