Published : 10 Nov 2022 10:34 PM
Last Updated : 10 Nov 2022 10:34 PM

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருமங்கலத்தில் வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோரை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மதுரை: தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று மதுரையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அறிந்த உடனே, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, மதுரை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர்கள் கே. ராஜேந்திரன், மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வறுமையின் பிடியிலுள்ள பெரும்பாலான கிராமப்புற மக்கள் வேறு வழியில்லாமல் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அனைத்து வெடிபொருட்களுக்கான மூலப்பொருளை கண்காணிக்கவும், உற்பத்திக்கு தகுந்தவாறு தொழில் செய்வதற்கான இடங்கள், தொழிலாளர்கள் பணியமர்த்தல் மற்றும் உரிய பாதுகாப்பு போன்ற அம்சங்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.

ஆனால் அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகள் தமிழகத்தில் தொடர்வதற்கும், மனித உயிர்கள் மடிவதற்கும் முக்கிய காரணமாகும். இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் கறாரான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற விபத்துகள் தொடர்கின்றன.

எனவே, தமிழகத்தில் பட்டாசு விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ரூ. 5 லட்சம் அறிவித்துள்ளார். இருப்பினும் இழப்பீட்டு தொகையை கூடுதலாக்கி ரூ. 25 லட்சமாக வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x