Published : 10 Nov 2022 03:05 PM
Last Updated : 10 Nov 2022 03:05 PM

சென்னை - மைசூரு ‘வந்தே பாரத்’ ரயிலின் வேகமும் பாதுகாப்பு அம்சமும் எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

வந்தே பாரத் ரயில் | கோப்புப் படம்

சென்னை: சென்னை - பெங்களூரு - மைசூரு வந்தே பாரத் ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படவுள்ள நிலையில், அதன் வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த சேவையை நாளை (நவ.11) பிரதமர் மோடி கே.எஸ்ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

தற்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 4 வந்தே பராத் ரயில்கள் கடந்த மாதம் மட்டும் 4 முறை விபத்தில் சிக்கின. குறிப்பாக, கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயிலின் முன்பகுதிகள் சேதம் அடைந்தன. சில நாட்களுக்கு முன்பு காந்திநகரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், குஜராத்தின் ஆனந்த் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54 வயது பெண் மீது மோதியது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் குறித்து ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டோம். இதற்கு அவர்கள் கூறுகையில், "வந்தே பாரத் ரயிலை அதிபட்சமாக 180 கி.மீ வரை இயக்க முடியும். இந்த வேகத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும் என்றால் தண்டாவளத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் ரயில் தண்டாவளங்கள் சுற்றி முழுமையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பபடவில்லை.

குறிப்பாக, கூற வேண்டும் என்றால், இந்தியாவில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளங்கள் நகரங்களுக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் ரயில் தண்டாவளத்திற்கு அருகில் மக்கள் வசிக்கும் நிலை கூட உள்ளது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் அதிக வேகமாக செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

ஆனால், சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் தற்போது மணிக்கு 75.60 கி. மீ வேகத்தில்தான் இயக்கப்படுகிறது. சதாப்தி ரயிலை விட மணிக்கு 5 கிலோ மீட்டர் மட்டுமே அதிக வேகமாக இயக்கப்படுகிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு குறைவுதான். இந்த ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டால் தடுப்பு வேலிகள் இல்லாத இடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று அவர்கள் கூறினர்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x