Published : 10 Nov 2022 11:02 AM
Last Updated : 10 Nov 2022 11:02 AM

20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்

சென்னை: தமிழக அரசு அனுப்பிய 20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "2022-23 கல்வியாண்டிற்கான முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான இணையவழி ஒற்றை சாளர கலந்தாய்வுக்கு சட்டக்கல்வி இயக்கத்தின் வாயிலாக 1433 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. கடந்த நவ.5-ம் தேதி சட்டக் கல்வி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கடிதம் இன்று வழங்கப்பட்டது" என்றார்.

அப்போது இந்த சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "வரும் 12-ம் தேதி, அனைத்துக்கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தவுள்ளார். அன்றையதினம், மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அனைத்துக்கட்சி ஆதரவுடனும், தமிழக மக்களின் ஒத்துழைப்புடனும் இந்த இடஒதுக்கீடு தேவையில்லை என்பதை திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.

தொடர்ந்து ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் தொடர்பாக ஐஏஎஸ் தலைமையில் ஆணையம் எப்போது அமைக்ககப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் வரவில்லை. ஆளுநர் அதற்கான ஒப்புதல் வந்தவுடன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்படும்.ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தின் ஷரத்துகள்தான் தற்போது அனுப்பியுள்ள அவசர சட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. புதிதாக எதுவும் இல்லை. ஒருவேளை விளக்கம் எதுவும் கேட்கப்பட்டால், விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம். ஆளுநரிடம் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் சிலவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்துள்ளோம். ஆளுநரை கையெழுத்திடச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x