Published : 09 Nov 2022 02:34 PM
Last Updated : 09 Nov 2022 02:34 PM

பணமதிப்பிழப்பின் பாதிப்புகள்: பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்

சென்னை: "பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்து வங்கி பரிமாற்றம் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், தற்போது பொது மக்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு ரூபாய் 30.88 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் கூறுகிறது. பணமதிப்பிழப்பிற்கு முன்பாக பொதுமக்களிடம் இருந்த பணப் புழக்கத்தின் மதிப்பு ரூபாய் 17.7 லட்சம் கோடியாகத் தான் இருந்தது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கடந்த 2016-ம் ஆண்டு 8 -ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் திடீரென தோன்றி 500, 1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்து அறிவிப்பை வெளியிட்டார். இதன் மொத்த தொகை ரூபாய் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி. இது மொத்த பணப் புழக்கத்தில் 86 சதவீதம் ஆகும். இந்த அறிவிப்பின் மூலமாக நாட்டிலுள்ள கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செய்வதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கவோ, மத்திய ரிசர்வ் வங்கியை கலந்து பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தன்னிச்சையாக எடுத்த முடிவை நாட்டு மக்களுக்கு அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பு செய்து நேற்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாட்டு மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய அறிவிப்பு வெளியிட்டு கடந்த ஆறு ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் மிஞ்சுகிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடியில், ரூபாய் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி வங்கிகளுக்குத் திரும்பி வந்து விட்டது. ஏறத்தாழ 99.3 சதவிகித மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பி வந்து விட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ரூபாய் மூன்றிலிருந்து நான்கு லட்சம் கோடி மதிப்புள்ள கருப்புப் பணம் வங்கிகளுக்குத் திரும்ப வராது என்று நம்பிய பிரதமர் மோடிக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

கடந்த ஆறு ஆண்டுகளாக பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட விளைவுகளையும், பாதிப்புகளையும் ஆய்வு செய்வது மிக மிக அவசியமாகும். கடந்த மே 27, 2022 ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி ரூபாய் 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டில் கள்ளப் பணப் புழக்கம் 101.93 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல ரூபாய் 2 ஆயிரம் மதிப்புள்ள நோட்டில் 54 சதவிகிதமும், ரூபாய் 10 மதிப்புள்ள நோட்டில் 16.45 சதவிகிதமும், ரூபாய் 20 மதிப்புள்ள நோட்டில் 16.48 சதவிகிதமும் கள்ளப் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பினால் கள்ளப் பணம் ஒழிவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளதை மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையே படம் பிடித்துக் காட்டுகிறது.

அதேபோல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்து வங்கி பரிமாற்றம் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், தற்போது பொது மக்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு ரூபாய் 30.88 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், பணமதிப்பிழப்பிற்கு முன்பாக நவம்பர் 4, 2016 அன்று பொதுமக்களிடம் இருந்த பணப் புழக்கத்தின் மதிப்பு ரூபாய் 17.7 லட்சம் கோடியாகத் தான் இருந்தது.

கடந்த ஆறு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மக்களிடையே பணப் புழக்கம் 71.84 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. பிரதமர் மோடி கூறியபடி மக்களிடையே வங்கிப் பரிமாற்றம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் பலமடங்கு கூடியிருக்கிறது. இதற்கு மேற்கண்ட புள்ளி விவரங்களே எடுத்துக்காட்டு.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய் 85 லட்சம் கோடியை மீட்டு இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை டெபாசிட் செய்வோம் என்று தேர்தல் பரப்புரையில் பாஜக கூறியது. ஆனால், சமீபத்தில் சுவிஸ் வங்கி அறிவிப்பின்படி இந்தியர்களின் பணம் ரூபாய் 30,500 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்பதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்த அறிவிப்புக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் ?

பாஜக ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, அதேபோல கள்ளப் பணம் ஒழிந்ததா? என்று ஆய்வு செய்தால் மிகுந்த ஏமாற்றம் தான் ஏற்படுகிறது. பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 2016-17 இல் 8.3 சதவிகிதமாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு கடுமையான பாதிப்பின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 2017-18 இல் 7 சதவிகிதமாக கடுமையாகச் சரிந்திருக்கிறது. இதனால் ரூபாய் 2.2 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இந்த கடுமையான சரிவினால் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டதற்கு, பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வங்கியில் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்று தீவிர முயற்சியில் ஈடுபட்டதிலும், பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியும் 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு ஏற்பட யார் காரணம் ? யார் பொறுப்பு ? இதற்கு பாஜகவினர் என்ன பதில் கூறப் போகிறார்கள் ?

மோடியின் அறிவிப்பு திட்டமிட்ட கொள்ளை என்றும், சட்டப்படியான மோசடி என்றும், இதனால் நாட்டிற்குப் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பொருளாதார நிபுணரான அவரது கூற்று இன்று நிரூபிக்கப்பட்டு நடைமுறையில் இந்திய மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இத்தகைய பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x