

கிருஷ்ணகிரி: பெங்களூரு மலர்ச் சந்தையில் உள்ள கடைகளுக்கு அம்மாநில அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். இதனால், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் இருந்து அங்கு விற்பனைக்கு செல்லும் மலர்கள் தேக்கம் அடைந்து, விவசாயிகளுக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மலர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் உள்ள மலர்ச் சந்தைக்கு விற்பனைக்கு செல்கிறது.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், அத்திகானூர், சந்தூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுஉள்ள மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பெங்களூரு செல்கிறது. தினமும் அதிகாலை 4 மணி முதல் பூக்களை பறிக்கும் விவசாயிகள் காலை 6 மணி முதல் 11 மணி வரை 150-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் பூக்களை பெங்களூருக்கு அனுப்பி வருகின்றனர்.
இதேபோல, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் அதிகளவில் பெங்களூரு மலர் சந்தைக்கு செல்கின்றன. இங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், பெங்களூரு மலர்ச் சந்தையில் உள்ள கடைகளுக்கு அம்மாநில அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். இதனால், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் இருந்து செல்லும் மலர்கள் தேக்கம் அடைந்து விவசாயிகளுக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது.
அரசின் நடவடிக்கை தேவை: இதுதொடர்பாக ஓசூர் தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறியதாவது: பெங்களூரு மலர்ச் சந்தையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில்,100 கடைகள் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் மலர்ச் சந்தை உள்ளதால், அங்குஉள்ள கடைகளை அகற்ற பெங்களூரு மாநகராட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மேலும், இதுதொடர்பான வழக்கு அம்மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், முன்னறிவிப்பு இல்லாமல் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், தமிழகத்தில் இருந்து செல்லும் மலர்கள் தேக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் 100 சதவீதம் மலர்கள் தேக்கம் அடைந்து, கடந்த 2 நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட விவசாயிகளுக்கு ரூ.8 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மலர்ச் சந்தை செயல்பட அம்மாநில அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.