Published : 07 Nov 2022 12:20 PM
Last Updated : 07 Nov 2022 12:20 PM

கூட்டுறவுச் சங்க வரலாற்றில் முதல் முறை | ரூ,10,000 கோடி பயிர்க் கடன் வழங்கல்: அரசு தகவல்

கோப்புப் படம்

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், " கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டி 2021-2022ம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292.02 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 8,44,082விவசாயிகளுக்கு ரூ.6341.89கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 2021-22-ல் 5,87,000 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 2,80,565 நபர்களுக்கு ரூ.1,730.81 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 1,40,722எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,12,537-க்கு ரூ.741.78கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1,54,847விவசாயிகளுக்கு ரூ.1022.57கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் முதல் முறையாக ஆடு, மாடு கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு, வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பாண்டில் இதுவரை 1,68,386 விவசாயிகளுக்கு ரூ.768.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் தங்கள் சொந்தகாலிலேயே வாழ்க்கை நடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு 5 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு ,நடப்பாண்டில் இதுவரை 3,376 எண்ணிக்கையில் ரூ.7.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

14,51,344 எண்ணிக்கையிலான நகைக்கடன்கள் ரூ.5,013.33 கோடியில் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 13,12,717 எண்ணிக்கையிலான குடும்பங்கள் பலன்அடைந்துள்ளனர்.

1,17,617 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,755.99 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் துவங்க இருக்கின்றது. இதன் மூலம் 15,88,309 எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பலன் அடைவார்கள். நடப்பாண்டில் 14,457 எண்ணிக்கையிலான குழுக்களுக்கு ரூ.474.33 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடத்தில் வகித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 6,063 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.28 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறைக்கென தனி பயிற்சிக் கொள்கை வெளியிடப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 268 மாணவமாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு ரூ.75.75 கோடிசெலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தானமாக வழங்கப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன. புதிய கட்டிடத்தில் 2,500 மாணவ மாணவியர்கள் கல்வி பெற இயலும்,

நாட்டிலேயே முதன்முறையாக தேசிய அளவிலான கூட்டுறவு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் மேலாண்மை கல்வி நிலையம், கொடைக்கானல் வட்டம், மன்னவனூர் கிராமத்தில் உருவாக்கப்பட உள்ளது. கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழும், FSSAI உரிமமும் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை ISO தரச்சான்றிதழ் பெற்ற நியாய விலைக்கடைகள் 3,662 ஆகும்.

மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நியாய விலைக்கடைகளை பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 2,252 எண்ணிக்கையிலான கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோர் நலனை கருத்தில்கொண்டு, நியாய விலைக்கடைகளில் 5 கிலோ மற்றும் 2 கிலோ FTL சிலிண்டர்கள் விற்பனை துவங்கப்பட்டது.

மாநிலம் முழுவதிலும் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 6,970 நியாய விலைக்கடைகளுக்கு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலம் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டொன்றுக்கு 300 புதிய கடைகள் வீதம் கட்டப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 282 கடைகளுக்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாநிலம் முழுவதும் 379 மருந்துகடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை தள்ளுபடியில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகடைகளில் மொத்த ஆண்டு விற்பனை 2021-2022-ஆம் ஆண்டில் ரூ.163.30 கோடியை எட்டியுள்ளது. இந்த மருந்துகடைகள் மூலம் 34,48,342 வாடிக்கையாளர்களுக்கு ரூ.26.91 கோடி அளவிற்கு (தள்ளுபடி) வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு (2022-2023) 31-10-2022 வரை ரூ.99.60 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x